அதிகரித்து வரும் சீரற்ற இதயத் துடிப்பு பிரச்னை... காரணங்கள் என்ன?

உடல் பருமன் பிரச்னை அதிகரித்து உள்ள நிலையில், இதனால் ஏற்படும், 'ஏட்ரியல் பைப்ரிலேஷன்' எனப்படும், சீரற்ற இதயத் துடிப்பு அதிகமானோருக்கு வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மின் அதிர்வுகளில், இதயத்துடிப்பில் ஏற்படும் மாறுபாடு இது. இந்நிலையில், சீரற்ற இதயத்துடிப்பை அவ்வப்போது உணர முடியும்.

இதயத்தில், மேல் அறை, கீழ் அறை என்று இரண்டு அறைகள் உள்ளன. இப்பிரச்னை இருந்தால், இதயத்தின் மேல் அறையில், வழக்கத்தை விடவும் இதயத்துடிப்பு அதிகமாக இருக்கும்.

சராசரியாக நிமிடத்திற்கு, 72 - 82 முறை இதயத்துடிப்பு இருக்க வேண்டும். இதைக் காட்டிலும் மிக அதிகமாக துடிக்கும் போது, இதய அறையில் உள்ள ரத்தம் முழுமையாக வெளியில் வராது.

இதய துடிப்பு அதிகமாக இருப்பாதால், மூச்சு விடுவதில் சிரமம், எதிர்பாராமல் நிலை குலைவது, ரத்த அழுத்தம் குறைவது, மூளைக்கு ரத்தம் செல்வது தடைபட்டு, பக்கவாதம் போன்றவை வரலாம்.

நாற்பது வயதிற்கு உட்பட்டவர்கள், இப்பிரச்னையால் பாதிக்கப்படுவது அதிகரித்து உள்ளது. அதிக மன அழுத்தம், உணவு முறை, சிகரெட், மது பழக்கம் போன்றவற்றால், இளம் வயதினரை இது அதிகம் பாதிக்கிறது.

இப்படி அடிக்கடி சீரற்ற இதயத் துடிப்பு மற்றும் அதன் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக டாக்டரிடம், ஆலோசனை பெற வேண்டும்.