புகை பிடிப்பதால் பற்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

புகை பிடிப்பது உடலுக்கு எந்தளவு தீங்கு விளைவிக்குமோ அதேயளவு வாய் , பற்கள், ஈறுகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

முதல்கட்டமாக பற்கள் பழுப்பு நிறத்தில் மாறும். நீண்ட காலம் புகை பிடிப்பவர்களின் பற்கள் கருப்பாகி விடும்.

இப்படி படியும் கறைகள் பின்னர் காரைகளாக மாறும். இந்த காரைகளே கிருமிகள் தங்கும் இடமாகும். இது பற்களை சுற்றியுள்ள ஈறுகளையும் எலும்பையும் அரிக்க ஆரம்பிக்கும்.

இதனால் சொத்தையே இல்லாமல் கூட பற்கள் ஆடி விழுந்து விடும் நிலை உருவாகும்.

புகை பிடிப்பவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைவாக இருக்கும். இதனால் பல் சொத்தை மற்றும் ஈறுநோய்கள் எளிதாக உருவாகும்.

ஈறுகளுக்கு வரும் ரத்தக்குழாய்கள் சுருங்குவதால் ரத்தஓட்டம் குறைவாக இருக்கும். ஈறுகள் பலவீனமாக மாறும்.

பல் தேய்க்கும் போது ரத்தம் வரலாம். உமிழ்நீர் சுரப்பது குறைந்து வாய் உலர்வாக இருப்பது போன்றிருக்கும். உண்ணும் உணவின் சுவை சரியாக தெரியாது.

வாய் புற்றுநோய் வருவதற்கு முதல் காரணமே புகை பிடிப்பதும் புகையிலை பயன்படுத்துவதும் தான்.