சார்கோபீனியா என்றால் என்ன? எப்படி தவிர்க்கலாம்?

வயதாவதால் வரும் சோர்வு, பலவீனம், சிறிய பொருளை எடுக்கக்கூட சிரமப்படுதல், நடக்கும் போதே உடல் சமநிலையை இழப்பது போன்ற பிரச்னைகள் வரலாம்.

வயது முதிர்வால் உடலில் உள்ள எலும்பு தசைகள் குறைந்து, அதன் வலிமை, செயல்திறன் படிப்படியாக குறைந்து வருவதால்தான் இப்பாதிப்பு ஏற்படுகிறது.

மருத்துவ மொழியில் இதற்கு 'சார்கோபீனியா' (Sarcopenia) என்று பெயர். இது, 40ல் துவங்கி 60 வயதில் தீவிரமாகும்.

தொடர்ந்து பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்தல், உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை முறை, வளர்ச்சி ஹார்மோன் அளவு குறைவது ஆகியன இந்த பாதிப்பு வர முக்கிய காரணங்கள்.

தசை வளர்ச்சிக்கு தேவையான புரதம், விட்டமின் டி ஆகியவற்றை உணவில் சரியாக சேர்த்து கொள்ளாமை, போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

அதிக புரதச்சத்து மிகுந்த பால், பால் சார்ந்த பொருட்கள், மீன், முட்டை, இறைச்சி உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை, சிறுநீரக நோய்கள், புற்றுநோய் போன்ற பாதிப்புகள், தசை சிதைவை விரைவுப்படுத்தும். எனவே அறிகுறி தென்பட்டதும் சிகிச்சையை துவங்க வேண்டும்.

தசை, எலும்புகளின் அடர்த்தியை அளவிடும், டெக்சா ஸ்கேன் எடுப்பதோடு, மருத்துவரின் பரிந்துரைப்படி பயிற்சி, மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

தசைகளை வலுப்படுத்தும் பயிற்சி, நடைப்பயிற்சி அவசியம். எலும்பு, தசை ஆகிய இரண்டும் வலு பெற, கால்சியம், விட்டமின் டி அவசியம்.

வெயிலில் உடலை காட்டினாலே விட்டமின் டி போதுமான அளவு கிடைக்கும். இதை தொடர்ந்து செய்தால், தள்ளாத வயதிலும் தளராமல் நடக்க முடியும் என டாக்டகள் கூறுகின்றனர்.