பருப்பு சாதமும், தயிர் சாதமும் எடுபடாமல் போனது ஏன்?
அவரவரின் வயது, உடல் எடை, உடல் கோளாறுகள், செரிமான சக்தி, உடல் உழைப்பு உட்பட பல காரணங்களால், எந்த மாதிரியான உணவு உண்ண வேண்டும் என தீர்மானிக்க வேண்டும்.
ஆனால், உணவு சேவைக்கான செயலிகள், வீட்டிற்கே வந்து உணவை தருவதுடன், எந்த உணவுகளுக்கு சலுகை, எதை ஆர்டர் செய்வது என ஆர்வத்தைத் துாண்டும் சக்தியாக மாறியுள்ளன.
குறிப்பிட்ட தினத்தில், ஒரு குறிப்பிட்ட பன்னாட்டு நிறுவனம், கோழி இறைச்சி உணவுகளுக்கு வழங்கும் இலவச சலுகை நம் மனதிற்குள் பதிந்திருக்கிறது.
நம் ஓய்வு நேரத்தை, பயண நேரத்தை முழுமையாக ஆக்கிரமித்துள்ள போனும், கம்ப்யூட்டரும், 'டிவி'யும் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
எனவே, நாம் உண்ணும் உணவை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.
காரணம், நம் தட்டிலுள்ள உணவு ஆரோக்கியமான சரிவிகித உணவாக இருந்தால், டாக்டரிடம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது; மருந்து செலவும் இல்லை.
குழந்தைகளின் உணவிலும் அக்கறையின்றி இருப்பதால் தான், அந்த இடைவெளியை, துரித உணவுகளும், அதிக உப்பு, சர்க்கரை, சோடியம் நிறைந்த தின்பண்டங்களும் நிரப்புகின்றன.
சுவையை கூட்டும் அஜினோ மோட்டா போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்பட்ட 'மொறுமொறு' உணவுகளின் முன், பருப்பு சாதமும், தயிர்சாதமும் எடுபடாமல் போகின்றன.
கார்ட்டூன் தொடர்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் என எல்லா இடங்களிலும் பரவி நிற்கும், பீட்சா, பர்கர், கோக் போன்றவை குழந்தைகளை எளிதாக கவர்கின்றன.
நீரிழிவு, மூட்டு வலியுள்ள பெற்றோர், கல்லுாரி, பள்ளி செல்லும் குழந்தைகள் என குடும்பத்திலுள்ள அனைவருக்கும் அவரவர் வயது, உடல் உழைப்பு தேவைக்கேற்ப சாப்பிட வேண்டும்.
எனவே, சமூக வலைதளங்களில் யாரோ சொல்லும் உணவை, ஆராயாமல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
உண்ணும் அளவான சரிவிகித உணவு, உடற்பயிற்சி, நல்ல உறக்கம், இறுக்கமற்ற சீரான மனநிலை என, நாம் செய்யும் வாழ்வியல் மாற்றங்கள் மட்டுமே ஆரோக்கியத்தைத் தரும்.