ஆரோக்கியமான உணவை சாப்பிட்டும் சிலர் சோர்வாக உணர்வது ஏன்?
சோர்வு என்பது போதியளவு ஊட்டச்சத்து இல்லாததால் ஏற்படும், ஆற்றல் பற்றாக்குறையின் அறிகுறி.
முதலாவதாக சாப்பிடும் உணவில், கார்போ ஹைட்ரேட், புரதம், நல்ல கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை சமச்சீராக இருக்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவை உண்பவர்கள் போதுமான அளவு கார்போஹைட்ரேட், கொழுப்பு உட்கொள்வதில்லை.
அதேசமயம், ஆரோக்கியமான உணவு என்ற பெயரில், அதிகப்படியான பழங்கள், பழச்சாறு, காய்கறிகள் சாப்பிடுகின்றனர். எனவே தான், போதுமான ஆற்றல் கிடைப்பதில்லை.
இருப்பினும், முறையற்ற உணவால் மட்டுமல்ல; துாக்கமின்மை, மன அழுத்தம், நீர்ச்சத்து குறைபாடு, சில உடல் கோளாறுகள், சில வகை மருந்துகளாலும் கூட சோர்வு ஏற்படலாம்.
மூளை, தசைகள் உட்பட உடலின் ஆற்றலுக்கு கார்போஹைட்ரேட் தான் முக்கியம்.
முழு தானியங்கள், சிறுதானியங்கள், ஓட்ஸ், உமி நீக்காத அரிசி உள்ளிட்டவற்றை, போதுமான அளவு சாப்பிடுவது நிலையான ஆற்றலைத் தரும்.
தசை வளர்ச்சி, புது செல்கள் உருவாக்கத்திற்கு புரதம் இன்றியமையாதது. உணவில் போதிய புரதச்சத்து இல்லாதது, திருப்தியற்ற உணர்வு, பலவீனமான தசைகளை ஏற்படுத்தும்.
பருப்புகள், பீன்ஸ், பயறு வகைகள், முட்டை, பால் பொருட்கள், மீன், கோழி, சோயா உட்பட புரதம் உணவில் இடம் பெற வேண்டும்.
நட்ஸ், விதைகள், அவகாடோ, தாவர எண்ணெய்களை சரியானளவு உட்கொண்டால், கொழுப்பு அமிலங்கள் உடலில் சேரும்; கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களை, உடல் உறிஞ்ச உதவும்.
இரும்புச்சத்து, வைட்டமின் பி12, போலிக் அமிலம் அல்லது பிற ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாலும், தொடர்ச்சியான சோர்வு ஏற்படலாம்.
இரும்புச்சத்து குறைபாட்டால், சோர்வு, பலவீனம், மூச்சுத்திணறல், கவனமின்மையும், வைட்டமின் 'பி12' குறைபாட்டால் சோர்வு,மரத்துப் போதல் போன்ற நரம்பியல் பாதிப்புகள் உண்டாகும்.
நீரிழப்பும், சோர்வு, தலைவலி, கவனம் செலுத்த இயலாமையின் காரணிகளில் ஒன்று; நீரின் தேவை நபருக்கு நபர் மாறுபடும்.
ரத்தசோகை, தைராய்டு கோளாறுகள், நீரிழிவு, துாக்கமின்மை, தொற்றுகள் ஆகியவையும் சோர்வை ஏற்படுத்தலாம்.