வனாந்தர சுற்றுலா... உங்களை நீங்களே உணரும் தருணம் !
நகரத்தில் வசிக்கும் பலருக்கும் பலவித பிரச்னைகள் உண்டு. உடல் உபாதைகள், வேலைப்பளு, பொருளாதார சிக்கல் என உங்கள் பிரச்னை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால் 550 கோடி ஆண்டுகளாக சுழலும் இந்த பூமியில் உங்களது 70-80 ஆண்டு சராசரி வாழ்நாள் மிக மிக மிகச் சிறியது.
இந்த பூமியில் நகரங்களை விட வனங்களும், மலைகளும், கடல்களுமே அதிகம். இயற்கையின் பிரம்மாண்டத்தை உற்று நோக்கினால் அதன் முன்னர் பிரச்னைகள் ஒன்றுமே இல்லை எனத் தோன்றும்.
மேலை நாட்டவர்கள் தன்னைத் தானே உணர இயற்கை சுற்றுலா செல்வர். ஆடம்பர விடுதிகளில் தங்குவது, விலையுயர்ந்த மது அருந்துவது, பஃபே உணவு சாப்பிடுவது அல்ல இந்த வனாந்தர சுற்றுலா.
உலகின் அரிய காடுகளுக்குத் தன்னந்தனியாகவோ அல்லது துணையுடனோ செல்வர். இவ்வாறு நகரத்துக்கு அப்பாற்பட்ட சுற்றுலா செல்வதால் என்ன பயன் என கேள்வி எழலாம்.
மனிதர்களுக்குத் தெரியாத பல விஷயங்கள் இயற்கைக்குத் தெரியும். ஓடை நீர், மர விழுது, காய்ந்த சறுகு என காட்டில் உள்ள அனைத்தும் பல கதைகளைச் சொல்லும்.
காட்டில் உள்ள ஓர் ராட்சத பாறை பல தலைமுறைகளைக் கண்டிருக்கும். அதன்மீது கை வைத்து சாய்ந்துகொண்டால் ஆயிரம் ஆண்டுகள் அப்பகுதியில் நடந்த கதைகளை உணர்வு பூர்வமாக சொல்லும்.
ஆண்டுக்கொருமுறையாவது நகரத்தை விட்டுத் தள்ளி இவ்வாறு வனாந்தர சுற்றுலா சென்றால் நீங்கள் யார், எதற்காக படைக்கப்பட்டீர்கள் என்பதை கொஞ்சமேனும் உணரலாம்.