2025ல் உலகின் சிறந்த சுற்றுலா தலங்கள்... 4ம் இடத்தில் அசாம்

உலகின் முன்னணி நாளிதழ்களில் ஒன்றான நியூயார்க் டைம்ஸின், சர்வதேசளவில் 2025ல் செல்ல வேண்டிய 52 சுற்றுலா மையங்கள் குறித்த பட்டியலில் அசாம் மாநிலம் 4ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கான நுழைவாயில் என்று கருதப்படும் அசாம், மியான்மர் மற்றும் வங்கதேசம் அருகே அமைந்துள்ளது.

கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இம்மாநிலம், இந்தியாவின் பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கூட்ட நெரிசல் குறைவானது.

இங்குள்ள அசாம் பிரமிடுகள் அல்லது சரைதேவ் மொய்தம், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னோர் உடல் அடக்கம் செய்யப்பட்ட இந்த பிரமிடுகள், ஆஹோம் ஆட்சியாளர்களால் 13ம் நுாற்றாண்டுக்கு பிறகு கட்டப்பட்டவை.

இங்குள்ள காஸிரங்கா தேசிய பூங்காவில், ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்களை காண முடியும்.

வரலாற்றுப் பொக்கிஷங்களுக்கு அசாம் கூடுதலாக முக்கியத்துவம் பெறுகிறது என நியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.

அசாம் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தியாவின் மிகவும் வியந்து பார்க்கக்கூடிய இடங்களில் ஒன்றாகும்.

அதன் இயற்கை அழகு, வளமான கலாசாரம் மற்றும் பசுமையான தேயிலைத் தோட்டங்களுடன், இது ஒரு தனித்துவமான இடமாகும். பார்வையாளர்கள் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறலாம்.