கம்பீர நடை போடும் பிரமாண்ட அமர் கோட்டை
தார் பாலைவனம், ஒட்டகம் என்ற பட்டியலைத் தாண்டி அழகிய சுற்றுலாத் தலமாக ராஜஸ்தான் உள்ளது. பிரமாண்டமான அமர் கோட்டையை வலம் வராமல் சுற்றுலா சிறக்காது.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் மலை உச்சியின் மேல், பிரமாண்டமாக வீற்றிருக்கும் இக்கோட்டை அரண்மணை, அன்றைய அரசர்களின் காலத்தை கண்முன் நிழலாய் காட்டுகிறது.
அமர்-கா-கிலா, ஆம்பர் கோட்டை, ஆம்பர் அரண்மணை எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த அமர் கோட்டை, யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சீனப் பெருஞ்சுவர் போன்று உலகின் 3வது நீளமான சுவரை இந்தக் கோட்டை கொண்டுள்ளது. மஞ்சள், இளஞ்சிவப்பு மணற்கற்கள், வெள்ளை நிற பளிங்குக்கற்களால் அரண்மனை எழுப்பப்பட்டுள்ளது.
கோட்டை நான்கு முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது; முற்றங்களுடன் அழகிய வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
திவான்-இ-ஆம், சுக் மஹால், ஜெனானா, சுஹாக் மந்திர் மற்றும் ஷீஷ் மஹால் உட்பட பல இடங்கள் அமர் கோட்டையில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
குறிப்பாக ஷீஷ் மஹாலில் உள்ள சுவர்கள் அனைத்தும் சிறிய கண்ணாடிகளால் ஆனது. சுற்றுலாவாசிகள் இங்கு புகைப்படம் எடுக்க அதிகளவில் ஆர்வம் காட்டுவர்.
சுக் மஹால் பகுதியில் தண்ணீர் அடுக்குகள் அமைக்கப்பட்டு, குளிர்ச்சியாக இருக்குமாறு உருவாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஐஸ்வர்யா ராய் நடித்த ஜோதா அக்பர் மற்றும் தீபிகா படுகோன், பிரியங்கா சோப்ரா நடித்த பாஜி ராவ் மஸ்தானி போன்ற பல பாலிவுட் படங்களில் இந்த அரண்மனையின் அழகை பார்க்கலாம்.