இன்று 76வது குடியரசு தின விழா!! குடியரசு தினம் என்றால் என்ன?
இந்தியா முழுவதும் ஜனவரி 26ல் குடியரசு தினம் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்...
குடியரசு என்றால், 'மக்களாட்சி' என்று பொருள். சுதந்திரத்துக்காக பாடுபட்ட பல அமைப்புகள் இணைந்து, ஜனவரி 1930-ல் பாகிஸ்தான் பகுதியில் உள்ள லாகூரில் மாநாடு நடத்தின.
மூவர்ண தேசியக்கொடியை ஏற்றினார் ஜவஹர்லால் நேரு. காந்தியடிகள் தலைமை தாங்கினார். அதில், 'பூர்ண சுவராஜ்' பெறுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதன் பொருள், முழுமையான சுதந்திரம் பெறுவதே நோக்கம் என்பதாகும். அதை செயல்படுத்தும் விதமாக, ஒரு வேண்டுகோள் விடுத்தார் காந்தியடிகள்.
அதில், ஆண்டு தோறும், ஜனவரி 26ம் நாளை சுதந்திர தினமாக கடைபிடித்து, ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்க கேட்டுக் கொண்டார்.
முறையான சுதந்திரம், 1947ல் பெற்றபின், டாக்டர் அம்பேத்கர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, இந்திய அரசியல் அமைப்பு சட்ட வரைவை உருவாக்கியது.
நேருவை பிரதமராக கொண்ட முதல் நாடாளுமன்றம், இந்த வரைவு குறித்து, 2 ஆண்டுகள் விவாதம் நடத்தியது. இறுதியாக, ஜன.24, 1950ல் அரசியல் அமைப்பு சட்ட வரைவு, திருத்தங்களுடன் ஏற்கப்பட்டது.
ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் எழுதிய அரசியல் அமைப்பு சட்டப் புத்தகம் உருவாக்கப்பட்டது. இதை, மக்களாட்சி மலர்ந்த நாளாக கொண்டாட முடிவு செய்தார் நேரு.
ஏற்கனவே, காந்தியடிகள் சுதந்திர தினமாக அறிவித்திருந்த, ஜனவரி 26-ம் நாளையே, மக்களாட்சி மலர்ந்த நாளாக, அதாவது குடியரசு தினமாக அறிவித்தார்.