அழகுக்கான மருந்து ஊசிகளை இனி அழகு மையங்கள் பயன்படுத்தக்கூடாது!
நாடு முழுதும் அழகு கலை மையங்கள் மற்றும் கிளினிக்குகளில், அழகு சிகிச்சை என்ற பெயரில் ஊசி மூலம் செலுத்தப்படும் அழகு சார்ந்த செயல்முறைகள் பிரபலமாக உள்ளன.
சமூக வலைதள விளம்பரங்கள் மூலமாக இத்தகைய அழகு சிகிச்சை முறைகள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், அழகு சிகிச்சைக்காக ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்துகள், அழகு சாதன பொருட்கள் என்ற வரையறைக்குள் வராது.
அவற்றை அழகு கலை நிபுணர்கள் பயன்படுத்த அனுமதி இல்லை' என, மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு தெளிவுபடுத்தியுள்ளது.
உடலை அழகுபடுத்த, துாய்மைப்படுத்த, உடலின் மீது தேய்க்க, ஊற்ற, துாவ அல்லது தெளிக்க பயன்படுபவை மட்டுமே அழகு சாதன பொருட்கள்.
எந்தவொரு அழகு சாதன பொருட்களையும் அழகு கலை மையங்கள் அல்லது தனி நபர்கள் ஊசி மூலம் பயன்படுத்த அனுமதி இல்லை.
மீறி அவற்றை அழகு சாதன பொருள் என்ற பெயரில் பயன்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமீறல்கள், தவறான நடைமுறைகள் குறித்து, மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் அல்லது மாநில மருந்து உரிமம் வழங்கும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாமென வலியுறுத்தப்பட்டுள்ளது.