மருந்து மாத்திரைகளால் மருவை சரி செய்யலாமா?
மருவில், இரு வகைகள் உள்ளன. சொரசொரப்பாக, வியர்க்குரு போல இருப்பதை, மரு என்று சொல்வோம். இது, வைரஸ் தொற்று; பரவக் கூடியது.
இதை தொட்டுவிட்டு, உடம்பின் மற்றொரு இடத்தை தொட்டால், அந்த இடத்திலும் மரு வந்து விடும்.
இன்னொன்று, கழுத்தைச் சுற்றி கறுப்பாக, குட்டி குட்டி உருண்டையாக, தோலில் இருந்து வரக்கூடிய வளர்ச்சி. இது, தொற்று கிடையாது என்பதால் பரவாது.
இரண்டு வைரஸ் வகைகள், மருவை உண்டாக்கும். ஒன்று, தோலில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. மற்றொன்று, பிறப்புறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துவது.
கால்களில் செருப்பு இல்லாமல் நடக்கும் போது, தரையில் இருக்கும் வைரஸ் கிருமிகள், கால்களில் ஒட்டிக் கொள்ளலாம்.
தொற்று பாதிப்பு உள்ளவர்களை தொட்டு பேசும் போது, கைகளில் வரலாம். தாம்பத்திய உறவின் வாயிலாகவும் பரவலாம்.
மருந்தோ, மாத்திரைகளோ கொடுத்து, மருவை சரி செய்ய முடியாது. பிறப்புறுப்பில் இருந்தால், ரத்தப் பரிசோதனை செய்து, அதற்கேற்ப சிகிச்சை செய்ய வேண்டும்.
பாதிக்கப்பட்ட இடத்தில், களிம்பு மருந்துகளை பயன்படுத்தி சரி செய்யலாம். வெளிப்புறத்தில் தடவும் மருந்துகளால், இரு வாரத்தில் மரு உதிராவிட்டால், லேசர் சிகிச்சையில் அகற்றலாம்.
திரவ நைட்ரஜனை தெளிப்பதால், சிறு மருக்கள் தானாகவே விழுந்து விடும். அளவில் பெரியதாக இருந்தால், அறுவை சிகிச்சை செய்வது ஒன்றே வழி.
ஒரு முறை நீக்கிய மரு, மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள், 10 - 15 % உள்ளது. லேசர் சிகிச்சை முடிந்து, புண் ஆறிய பின்னும், தொடர்ந்து மருந்துகள் தடவ வேண்டி இருக்கும்.