கலர்புல் கேரட் பர்பி ரெசிபி

தேவையானப் பொருட்கள்: கேரட் -அரை கிலோ, நெய் - கால் கப், பால் - அரை லிட்டர், பாதாம் - 10, முந்திரி பருப்பு - 15.

தேங்காய் துருவல் - கால் கப், வெல்லம் - அரை கப், சர்க்கரை - கால் கப், ஏலக்காய் தூள் - அரை டீஸ்பூன்.

கேரட்களை மேற்தோலை நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, மிக்சியில் கொரகொரப்பாக அரைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து சூடானவுடன் சிறிது நெய் ஊற்றி, அரைத்த கேரட்டை சேர்த்து, மிதமான தணலில் 5 - 6 நிமிடங்களுக்கு வதக்கவும்.

காய்ச்சிய பாலை சேர்த்து, கேரட்டை நன்றாக வேக வைக்கவும். பின் பாதாம், முந்திரிப்பருப்பு, தேங்காயை மிக்சியில் போட்டு மாவாக அரைக்கவும்.

கேரட் வெந்துவிட்டால் நெய் தனியாக பிரிந்து மேலே மிதக்கும். அந்த பதம் வந்தவுடன், பாதாம், முந்திரி, தேங்காயை போட்டு கைவிடாமல் கிளறவும்.

இந்த கலவை கொதி வந்ததும், துருவிய வெல்லத்தை போட்டு கிளறவும். தொடர்ந்து, சர்க்கரையை சேர்த்து மிதமான தணலில் ஓரிரு நிமிடங்கள் வேக விடவும்.

இதில், நெய்யை சிறிது, சிறிதாக சேர்த்து கை விடாமல் கிளறவும். கடாயில் ஒட்டாமல் சுருண்டு வந்த பின், ஏலக்காய் துாள் சேர்க்கவும்.

இறுதியாக, தட்டில் நெய் தடவி, இந்த கலவையை பரப்பி விருப்பமான வடிவத்தில் வெட்டினால், சுவையான கேரட் பர்பி இப்போது ரெடி.

விருப்பப்பட்டால், உலர்ந்த பழங்களை பொடியாக நறுக்கி, பர்பி மீது துாவி பரிமாறலாம்.