ஆடம்பர திருமணமா? டில்லியின் வரலாற்று நினைவு சின்னங்கள் இனி வாடகைக்கு கிடைக்கும் !
தலைநகர் டில்லியை சுற்றி, முகலாயர் காலத்து வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள் பரந்து விரிந்து கிடக்கின்றன.
அவற்றில், தாஜ்மஹால் உள்ளிட்ட பல நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பின் கீழுள்ளன.
இந்நிலையில், நினைவுச் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை, கலாசார விழாக்கள் மற்றும் திருமணத்துக்கு வாடகைக்கு விட டில்லி அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக, அனைத்து நினைவுச் சின்னங்களிலும் அடிப்படை கட்டமைப்பை ஏற்படுத்தும் பணிகளை சுற்றுலா அமைச்சகம் செய்து வருகிறது.
'டெஸ்டினேஷன் வெட்டிங்' எனப்படும், பிரபலமான இடத்தை தேர்வு செய்து, திருமணம் செய்ய வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது.
எனவே, வரலாற்றின் அழகும், நவீன வசதிகளும் ஒரு சேர கிடைக்கும் இடமாக டில்லி நகரை மாற்றுவதே இத்திட்டத்தின் நோக்கம் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முதல் கட்டமாக, 10 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிப்பாய் கலக நினைவுச் சின்னம். இரண்டாவது, காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள தாரா சிகோ நுாலகம்.
மூன்றாவது, குத்ஸியா தோட்டம். இதுவும் சிவில் லைன்ஸ் பகுதியில் காஷ்மீர் கேட் அருகிலுள்ளது. இது போன்று வசந்த் விஹார், சாந்தினி சவுக் போன்ற பகுதிகளில் தொடர்கிறது.