வெங்காரத்தை சுயமருந்தாக உண்ண வேண்டாம்... டாக்டர்கள் எச்சரிக்கை...

மதுரையில் உடல் பருமனை குறைக்க யுடியூப்பை பார்த்து வெங்காரத்தை உட்கொண்டதால் கல்லுாரி மாணவி உடல்நலம் பாதித்து இறந்தார்.

முறையான வழிகாட்டுதலின்றி சுயமருத்துவம் செய்யக்கூடாது என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

வெங்காரம் (Borax/ Borate) என்பது சோடியம் டெட்ராபோரேட் (Sodium Tetraborate) வெள்ளை நிறத்தில், கற்கண்டு போன்ற வடிவத்தில் இருக்கும் ஒரு கனிம உப்பு.

இது துவர்ப்பு சுவையுடையது, சோடியம் போரேட் என வேதியியல் ரீதியாக அழைக்கப்படுகிறது.

இது தங்கம் உருக்கவும், சில குறிப்பிட்ட மருத்துவ முறைகளில் சுத்திகரிக்கப்பட்ட பின்பே மிகக் குறைந்த அளவில் பயன்படுத்தப்படுவதாகும்.

வெங்காரம் உணவாக சாப்பிடுவது ஆபத்தானது. இது நச்சுத்தன்மை ஏற்படுத்தும். சிறிய அளவில் உட்கொண்டாலும் வாந்தி, குமட்டல், வயிற்று வலி ஏற்படும்.

மேலும் அதிக அளவில் சிறுநீரக பாதிப்பு, குடல் இரைப்பை புண், மயக்கம் என மரணம் வரை ஏற்படலாம்.

யு டியூப்பில் கூறப்படும் மருத்துவ குறிப்புகளை மருத்துவர்கள் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.