மாடுகளுக்கு அளவுக்கு அதிகமாக பொங்கல் கொடுக்கக் கூடாது! விவசாயிகளுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தல்

கால்நடைகளுக்கு அளவுக்கு அதிகமாக பொங்கல் உணவளித்தால் உயிரிழப்புகூட ஏற்படும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் உஷார்படுத்துகின்றனர்.

கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக இன்று மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.

மாட்டு பொங்கல் அன்று வழக்கமாக கரும்பு, பொங்கல், அரிசி மற்றும் வடை போன்ற எண்ணெய் பலகாரங்களை ஆடு, மாடுகளுக்கு விவசாயிகள் வழங்குகின்றனர்.

கரும்பில் சர்க்கரை அதிகம் உள்ளது. அதை சாப்பிடும் கால்நடைகள் இரு நாட்கள் மந்தமாகவே இருக்கும். எனவே, முழு கரும்பாக தராமல் சக்கையாக சாப்பிடுவதற்கு வழங்கலாம்.

பொங்கல், அரிசியை ஒரு கையளவு தரலாம். அதிகமாக சாப்பிட்டால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரித்து நரம்பு மண்டலத்தை பாதிக்கும். வயிறு உப்புசம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படலாம்.

மீதமிருக்கும் பொங்கல் உள்ளிட்ட உணவு பொருட்களை மறுநாளும் வழங்குகின்றனர். கிலோ கணக்கில் சாப்பிடுவதால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் விவசாயிகள் அதை தவிர்க்க வேண்டும்.

கால்நடைகளின் நிலைமை மோசமாகும் வரை காத்திருக்காது உடனடியாக மருத்துவர்களை அணுகுமாறு கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்துகின்றனர்.