சொரியாசிஸ் நோயை கட்டுப்படுத்தும் உணவு
        
சில நோய்கள் இன்றைய தேதி வரை குணப்படுத்த இயலாதவையாக உள்ளன. ஆனால், இவற்றைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். 
        
அப்படியான ஒன்று தான் சொரியாசிஸ். உலகம் முழுக்க 12.5 கோடி மக்கள் சொரியாசிஸ் நோயால் அவதிப்படுகின்றனர்.
        
இதைக் கட்டுப்படுத்த எந்த வகையான உணவு முறை உதவும் என விஞ்ஞானிகள் ஆய்வுசெய்து வந்தனர்.
        
ஸ்பெயின் நாட்டின் ஆய்வாளர்கள் மத்திய தரைக்கடல் உணவு முறை வாயிலாக இந்நோயை ஓரளவு கட்டுக்குள் வைத்திருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். 
        
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பருப்பு, ஆலிவ் எண்ணெய், கொட்டைகள், மீன் போன்றவற்றை முதன்மையாக உள்ளடக்கிய மத்திய தரைக்கடல் உணவு முறையாகும். 
        
இதில், பல்வேறு சத்துக்கள் உள்ளன. பலவிதமான நோய்கள் வராமல் தடுக்கின்ற ஆற்றலுடையது. இவை தோலில் ஏற்படும் அழற்சியை கட்டுக்குள் வைத்திருக்கும்.
        
அதற்கு காரணம், இந்த உணவு முறையில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் ஈ, பாலி பீனால் முதலிய சத்துக்கள் இருப்பது தான். 
        
இந்த ஆய்வில் மிதமான முதல் நடுத்தர சொரியாசிஸ் பாதிப்புள்ள நபர்களுக்கு 18 வாரம் தொடர்ந்து மத்திய தரைக்கடல் உணவுகளைக் கொடுக்கப்பட்டது. 
        
பிறகு அவர்கள் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்ததில், பலருக்கும் முன்னேற்றம் இருந்தது. நோய் தாக்கம் குறைந்திருந்தது; நன்றாக துாங்க முடிந்தது.
        
எனவே, மருந்துடன் சேர்த்து மத்திய தரைக்கடல் உணவு முறையை மேற்கொண்டால் நோயின் பாதிப்பு குறையும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.