சுவையான கோல்டன் பிரைடு ரைஸ்...
ஹோட்டல், ரெஸ்டாரென்ட் சென்றால், சைவ உணவில் அனைவரும் தவறாமல் ஆர்டர் செய்வது பிரைடு ரைஸ். சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் பிடித்தமான உணவு இது.
அதனால்தானோ என்னவோ... மூலைக்கு மூலை ஃபாஸ்ட் புட் கடைகளில், வெஜ், எக், மஸ்ரூம், சிக்கன் என விதவிதமான சுவைகளில் பிரைடு ரைஸ் கிடைக்கிறது.
ஆனால், ஒருசிலக் கடைகளில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக, அதில் எக்கச்சக்கமாக மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.
எனவே, வீட்டிலேயே சுவையாகவும், அதேநேரத்தில் ஆரோக்கியமாகவும் கோடன் பிரைடு ரைஸ் செய்யும் ரெசிபி இதோ...
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் நறுக்கிய வெள்ளைப்பூண்டை நன்றாக வதக்கவும். நறுக்கிய கேரட், பீன்ஸ், பச்சைப்பட்டாணி, வெங்காயத்தாளை வதக்கவும்.
உப்பு, குருமிளகுத்தூள் சேர்த்துக் கிளறி, நறுக்கிய முட்டைக்கோஸ், சோயா சாஸை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். ஒருசில நிமிடங்கள் கழித்து இதை தனியே எடுத்து வைக்கவும்.
முட்டையை உடைத்து மஞ்சள் கருவை மட்டும் தனியே எடுத்து, வடித்த சாதத்துடன் சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும். சீரகச்சம்பா அரிசி என்றால் சுவை தூக்கலாக இருக்கும்.
பின்னர், அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு, முட்டையின் வெள்ளை பகுதியை ஊற்றவும். சிறிது குருமிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும்.
ஒரு நிமிடம் கழித்து முட்டையின் மஞ்சள் கரு கலந்த சாதத்தை சேர்க்கவும். முட்டைக் கலவை முழுமையாக வேகும் வரை சாதத்தை நன்றாக கிளறிவிடவும்.
பின்னர், ஏற்கனவே ஃபிரை செய்த காய்கறி கலவையை சேர்த்து நன்றாக கிளறிவிடவும். இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள்களை தூவி இறக்கினால், கோல்டன் ஃபிரைடு ரைஸ் தயார்.