குழந்தைகளிடையே பரவுகிறது கை, பாதம், வாய் நோய் பாதிப்பு
கை, பாதம், வாய் நோய், பருவ கால தொற்று. இது, 'காக்ஸ்சாக்கி வைரஸ் ஏ 16' வகையை சார்ந்தது.
இதனால், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது. இதே வகையை சார்ந்த, 'என்டிரோ வைரஸ் 71' ஏற்பட்டால், பாதிப்பு தீவிரமாக இருக்கும்.
தமிழகத்தில் பரவும் வைரஸ், மிதமாக பாதிப்புகளை ஏற்படுத்தி, ஒரு வாரத்திலேயே குணமாகி விடும். இந்நோய், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது.
காய்ச்சல், தொண்டை எரிச்சல், வாய் மற்றும் நாக்கில் புண், தலைவலி, கை, கால், முதுகுக்கு கீழ் மற்றும் பாதங்களில் கொப்பளங்கள் தோன்றுதல் அகிய பாதிப்புகள் இருக்கும்.
மேலும், பசியின்மை, தோலில் அரிப்பு, சிவப்பு நிறத்தில் தட்டையாக மாறுதல் போன்றவை இருந்தால், உடனடியாக உரிய சிகிச்சை பெற வேண்டும்.
இந்நோய், சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று போன்றவற்றின் வாயிலாகவும் பரவக்கூடியது.
தினசரி இரண்டு முறை, குழந்தைகளை தண்ணீரால் துடைத்து விடுவதன் வாயிலாக, இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோய் குறித்த அச்சம் வேண்டாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம், மற்ற குழந்தைகளுக்கு பரவாமல் இருக்க, ஒரு வாரம் பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.
பள்ளியில் ஒரு குழந்தை பாதிக்கப்பட்டால், அப்பள்ளியை முழுமையாக சுத்தம் செய்வதன் வாயிலாக, மற்ற குழந்தைகளுக்கு பரவுவதை தடுக்கலாம்.