நம் ஊரின் வரலாற்றுத் தலங்கள்..!
நம் நாட்டின் தென்முனையாக கன்னியாகுமரி அமைந்துள்ளது. உலகுக்கு பொதுமறை வழங்கி தமிழுக்கு பெருமை சேர்த்த ஐயன் திருவள்ளுவர் சிலை, முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் 133 அடி உயரத்தில் கம்பீரமாக இங்கு வீற்றிருக்கிறது.
சோழர் தம் பெருமையை, காவேரி செழிக்கும் தஞ்சையில் காணலாம். பார்க்க சலிக்காத பெரிய கோயில், கரிகாலன் பெயர் சொல்லும் கல்லணை, பிற்கால வரலாறை சொல்லும் சரபோஜி மஹால் இங்கு அமைந்துள்ளன.
சோழர்களின் முக்கிய துறைமுகமாக இருந்தது காவேரிப்பூம்பட்டினம் என்று அழைக்கப்பட்ட பூம்புகார். இங்கு சிலப்பதிகார கலைக்கூடம் மற்றும் அருங்காட்சியகம், மாசிலாமணி நாதர் கோயில், கடற்கரை ஆகியவை உள்ளன.
புதுச்சேரி, பழந்தமிழர் நாகரிகம் செழித்திருந்த இடங்களில் ஒன்று. இங்கு பிரான்ஸ் போர் நினைவிடம், பாரதி அருங்காட்சியகம், பொட்டானிகல் கார்டன், அரவிந்தர் ஆசிரமம், ஆரோவில் ஆகியவை காணத் தகுந்தவை.
சிற்பங்களுக்கு மரணமில்லா வாழ்வளித்த பல்லவர்களின் பெருமையை பறைசாற்றுகிறது மாமல்லபுரம். இங்குள்ள கடற்கரை கோயில், ஒற்றைக்கல் குடல்வரைக் கோயில்கள், சிற்பங்கள், காண்போரை வியக்க வைக்கின்றன.