வங்கி கணக்குக்கு தெரியாதவர்களிடமிருந்து பணம் வந்தால் என்ன செய்யலாம்?
முன்பின் தெரியாத நபரிடமிருந்து ஒருசில நேரங்களில் வங்கி சேமிப்பு கணக்கில், ஆயிரக்கணக்கில் பணம் தவறுதலாக வரவு வைக்கப்படும்.
உஷார்! இது ஒரு இணையவழி மோசடியாக இருக்கலாம். ஜிபே, போன்பே, நெப்ட் என எந்த வழியிலும் பணத்தை திருப்பி அனுப்பாதீர்கள்.
மோசடி நபர்கள், யாருடைய கணக்கையோ 'ஹேக்' செய்து, அந்த பணத்தை உங்கள் கணக்குக்கு மாற்றியிருக்கலாம்.
பிறகு உங்களிடம் அழுது புலம்பியோ, மிரட்டியோ பணத்தை தங்களின் வேறொரு கணக்குக்கு அனுப்ப சொல்வர்.
நீங்கள் அனுப்பிவிட்டால், சைபர் கிரைம் போலீசார் 'ஹேக்' செய்யப்பட்ட கணக்கை விசாரிக்கும் போது, பணம் உங்கள் கணக்கிற்கு வந்திருப்பதால், முதல் குற்றவாளியாக உங்களை சந்தேகிப்பர்.
தொடர்ந்து, உங்களின் வங்கி கணக்கும் முடக்கப்படும். எனவே, வந்த பணத்தை பயன்படுத்த வேண்டாம்; அப்படியே வங்கி கணக்கிலேயே இருக்கட்டும்.
அந்த நபர் மீண்டும் தொடர்பு கொண்டால், அவரது வங்கிக்கு சென்று, தவறான கணக்குக்கு பணம் அனுப்பி விட்டேன், பெற்று தரவும் என எழுத்துப்பூர்வமாக புகாரளிக்க சொல்லுங்கள்.
அந்த வங்கி, உங்களுடைய வங்கிக் கிளையைத் தொடர்பு கொண்டு, பணத்தை உங்கள் வங்கி கணக்கிலிருந்து எடுத்துக்கொள்ள உங்களுடைய அனுமதியை கேட்கும்.
இதற்குள் உங்கள் வங்கியில் விவரம் கூறி, சம்பந்தப்பட்ட வங்கி கிளையிலிருந்து ஏதேனும் கோரிக்கை வருமானால், பணத்தை கழித்துக்கொள்ளுமாறு தெரிவிக்கவும்.
அந்த நபர் உண்மையாகவே பணத்தை தவறான நபருக்கு மாற்றியிருக்கலாம். ஆனால், அனைவரையும் நம்ப வேண்டாம். ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லையே!