சந்தையில் கலப்பட மஞ்சள் அதிகரிப்பு... பயன்படுத்தும் முன் பரிசோதிக்கணும் !
உணவின் சுவை, நிறம் மட்டுமின்றி, நோய் எதிர்ப்பு சக்தி போன்ற உடல் ஆரோக்கியத்திற்காவும், அனைத்து விதமான சமையலிலும் மஞ்சள் துாள் சேர்க்கப்படுகிறது.
இந்நிலையில், மஞ்சள் துாளில், கலப்படம் செய்து சந்தையில் விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
நிறத்தை மேம்படுத்த, செயற்கை நிறமிகள், தீங்கு விளைவிக்கும் சாயங்கள் உள்ளிட்ட பொருட்கள் கலக்கப்படுகின்றன.
குறிப்பாக, மெட்டானில் மஞ்சள், லெட் குரோமேட், சுண்ணாம்பு துாள், காட்டு மஞ்சள் ஆகியவை கலக்கப்படுகின்றன.
இவற்றை சாப்பிடுவதால், புற்றுநோய், வயிற்று வலி, குமட்டல், செரிமான கோளாறுகள் போன்ற உடல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துமென, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
லாப நோக்கத்திற்காக, அதிகளவில் கலப்பட மஞ்சள் துாள் விற்பனை செய்யப்படும் நிலையில், அவற்றை வீட்டிலேயே பரிசோதித்து கண்டறியலாம் என, உணவு பாதுகாப்பு துறை வலியுறுத்தியுள்ளது.
அனைத்து வித மஞ்சள் துாளும் சந்தேகத்திற்கு உரியவை அல்ல. ஆனால், பிரபல நிறுவனத்தின் பெயரில் கூட, சில நேரங்களில் போலியான லேபிள் ஒட்டப்பட்டு மஞ்சள் துாள் விற்கப்படுகிறது.
எனவே, வீட்டில் பயன்படுத்தப்படும் மஞ்சள் துாள் தரத்தை உறுதி செய்து கொள்வது முக்கியம். ஒரு டம்ளரில் தண்ணீர் எடுத்து, அதில் ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் சேர்க்கவும்.
சிறிது நேரத்தில், மஞ்சள் துாள் அனைத்தும் டம்ளரின் கீழே தங்கிவிட்டால் அது கலப்பிடமில்லாத மஞ்சள் துாள்.
கீழே படியாமல், அதன் துகள் மேலே மிதந்தாலோ, தண்ணீர் அடர்த்தியான கரும் மஞ்சள் நிறமாக மாறினாலோ, அது கலப்பட மஞ்சள் துாள்.
சந்தேகம் எழுந்தால், அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்து, உணவு பாதுகாப்பு துறைக்கு செல்போன் எண் அல்லது செயலி மற்றும் சமூக வலைதளங்களிலும் புகார் தெரிவிக்கலாம்.