இன்று உலக சுற்றுச்சூழல் தினம்!

ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 5 ஆம் தேதி, உலகம் முழுவதும், உலக சுற்றுச்சூழல் தினம் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.

இந்த தினம், ஐக்கிய நாடுகள் சபையால், 1972 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது.

சுற்றுச்சூழல் சவால்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இயற்கையைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்கவும் இந்த நாள் ஒரு முக்கியத் தளமாகச் செயல்படுகிறது.

பூமியின் வளம் வேகமாகச் சிதைந்து வருகிறது. வன அழிப்பு, 'பிளாஸ்டிக்' மாசுபாடு, காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு ஆகியன இயற்கையின் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.

காற்று, நீர் மற்றும் நில மாசுபாடு ஆகியவை மனித ஆரோக்கியத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.

காடுகள் அழிக்கப்படுவதால் பல விலங்குகள் மற்றும் தாவரங்களின் இனங்கள் அழிந்து வருகின்றன.

இயற்கையின் இந்தச் சங்கிலி அறுபடும்போது, சுற்றுச்சூழல் சேவை பாதிக்கப்பட்டு, உணவுப் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது.

உலக சுற்றுச்சூழல் நாள், இந்த நெருக்கடிகளை நாம் இனியும் அலட்சியம் செய்யக்கூடாது என்பதை உரக்கச் சொல்கிறது.

'இயற்கையால் உத்வேகம் பெறுவோம்: பருவநிலைக்காக, நம் எதிர்காலத்துக்காக' என்பது இந்தாண்டு மையக்கருத்து.