தீபத்திருநாள் ஸ்பெஷல்: சுவையான ரவை அப்பம்
கார்த்திகை மாதம் என்றாலே ஆன்மிகத்திற்கு சிறப்பான மாதம். இந்த மாதத்தில் வரும் தீபத் திருநாளில், கடவுளுக்கு விஷேச பூஜைகள் செய்து இனிப்பு, பலகாரங்களை பிரசாதமாகப் படைப்பர்.
புதுவித இனிப்பை படைக்க விரும்புவோருக்கு, பஞ்சு போன்ற மிருதுவான கார்த்திகை தீப அப்பத்தை வீட்டிலேயே செய்வது குறித்து பார்க்கலாம்.
150 கிராம் வெல்லத்தை பொடித்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பாத்திரத்தில் வைத்து கரையும் வரை சூடுபடுத்த வேண்டும்.
ஆறிய வெல்லப்பாகுடன் ஒரு கப் ரவையை சேர்த்து, 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின், இதனுடன் 1/2 கப் தேங்காய் துருவல், சிறிதளவு தண்ணீரை சேர்த்து மிக்சி ஜாரில் நன்றாக அரைக்கவும்.
அரைத்த மாவுடன் 1/4 கப் அரிசி மாவு, 1/2 டீஸ்பூன் ஏலக்காய்த் தூள், 1 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்றாகக் கலக்கி, 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கையில் சிறிது சிறிதாக தட்டிய மாவை போட்டு, நன்றாக வேகவிட்டு, பொன்னிறமாக வந்தவுடன் எடுத்தால் சுவையான அப்பம் ரெடி.
கடாய்க்கு பதிலாக பணியாரக் கல்லில் கூட, சிறிது சிறிதாக ஊற்றி எடுக்கலாம்.