பல்மோனரி எம்பாலிசம்... நுரையீரல் ரத்த குழாய் அடைப்பு நோய் குறித்து அறிவோமா?

பல்மோனரி எம்பாலிசம் எனும் நுரையீரல் ரத்த குழாய் அடைப்பு நோய், இது மாரடைப்பை விட தீவிரமான நோயாக கருதப்படுவதால், உடனே சிகிச்சையை துவங்க வேண்டும்.

கால்களில் உள்ள ஆழமான நரம்புகளில் உருவாகும் ரத்த உறைவுக்கட்டிகள், ரத்த ஓட்டம் வழியாக, இதயத்தின் வலதுபுறமுள்ள நுரையீரலுக்கு சென்று, ரத்த குழாய் அடைப்பை ஏற்படுத்துவதால் உண்டாகிறது.

இதனால், திடீர் மூச்சுத்திணறல் ஏற்படுவது, நெஞ்சுவலி, வேகமான இதயத்துடிப்பு, தலைச்சுற்றல், மயக்கம், அதீத வியர்வை உள்ளிட்ட சில அறிகுறிகள் தோன்றும்.

ஆப்ரேஷன், எலும்பு முறிவு உள்ளிட்ட காரணங்களால் மாதக்கணக்கில் படுத்தே இருப்பவர்கள், நீண்ட நேரம் அமர்ந்து, நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களுக்கு இந்நோய் வரலாம்.

புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் பாதிப்பு, கருத்தடை மாத்திரை சாப்பிடுவோர், நீரிழிவு, ரத்த அழுத்தம், உடல்பருமன் உள்ளவர்களுக்கு வரும் வாய்ப்புகள் அதிகம்.

வெரிக்கோஸ் பாதிப்புள்ளவர்களுக்கு கால் நரம்புகள் சுருண்டிருப்பதால், ரத்த கட்டிகள் உருவாகலாம். பிறவியிலே புரோட்டீன் சி-எஸ்., குறைப்பாடுள்ளவர்களுக்கு ரத்தம் உறைவது அதிகரிக்கும்.

அறிகுறி தென்பட்ட 14 நாட்களுக்குள் சிகிச்சையை துவங்க வேண்டும். ரத்தம் உறைதலை தடுப்பது, மீண்டும் உறையாமல் இருக்கவும், பிரத்யேக மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படும்.

இத்துடன் கத்தீட்ரல் வழி சிகிச்சை மூலமாகவும், ரத்த கட்டிகள் கரைக்கப்படும். இறுதி நிலையில், அறுவை சிகிச்சை மூலமாக நுரையீரலில் உள்ள கட்டிகள் அகற்றப்படும்.

இந்நோய் வராமல் தவிர்க்க நீண்ட நேர பயணங்களின் போது காலின் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் கம்பிரஷன் சாக்ஸ் வாங்கி அணியலாம்.

உட்கார்ந்து கொண்டே வேலை செய்வோர், சிறிது நேர இடைவெளியில் கால் அசைப்பது, நடப்பது, எளிய பயிற்சிகள் செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

இந்நோய், 40 வயதுக்கு மேல், குறிப்பாக ஆண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கர்ப்ப காலத்தில் அதீத மூச்சிரைப்பு மூலம், பெண்களுக்கு உள்ளதா என பரிசோதனையில் அறியலாம்.