சில்லுன்னு குல்பி, குச்சி ஐஸ், ஜூஸ்... சாப்பிடும் முன் கொஞ்சம் உஷாரா இருங்க !

கொளுத்தும் வெயிலுக்கு இதமாக சாப்பிட குல்பி, குச்சி ஐஸ் வண்டிகள், மலிவு விலை ஜூஸ் கடைகளை நோக்கி, மக்கள் படையெடுக்க துவக்கிவிட்டனர்.

ஆனால், தள்ளுவண்டிகளில் குல்பி, குச்சி ஐஸ் விற்கும் பலரும், முறையாக கையுறை அணியாமல், 'பேக்கிங்' செய்யாமல் விற்கின்றனர்.

பல இடங்களில் குளிரூட்டப்பட்ட பாத்திரத்தில் நிரப்பி, மலிவு விலையில் ஜூஸ், சர்பத், மில்க் ஷேக், ரோஸ் மில்க் போன்ற குளிர்பானங்கள் விற்கப்படுகின்றன.

இவை தரமான பழங்களில் தயாரிக்கப்பட்டவையா, எந்த தண்ணீர் பயன்படுத்தப்பட்டது என தெரியாமல் குடித்து, உடல்நல பாதிப்புகளுக்கு உள்ளாக வேண்டாமென டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.

சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஐஸ், ஜூஸ் ஆகியவை சாப்பிடும் போது, தொற்று நோய் கிருமிகளால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

டைபாய்டு, வயிற்றுப்போக்கு, வாந்தி, தொண்டை பகுதியில் தொற்று, சளி, இருமல் தொந்தரவுகள் ஏற்படலாம்.

வெளியிடங்களுக்கு செல்லும் போது, காய்ச்சி, ஆற வைத்த நீரை உடன் கொண்டு செல்வது, இளநீர், மோர் குடிப்பது நல்லது என்பது டாக்டர்களின் அட்வைஸாகும்.