பள்ளி செல்லும் குழந்தைகளுக்கேற்ற மதிய உணவு

குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்து அனுப்பும் போது, நல்ல சத்தான, குழந்தைகள் ஆர்வத்துடன் சாப்பிடும் அளவுக்கு சுவையாக இருப்பது அவசியம்.

5 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மதியம் பள்ளியில் சாப்பாடு சாப்பிடுவதற்கு சிரமப்பட்டாலோ, ஆர்வம் காட்டாமலோ இருக்கும் பட்சத்தில் இட்லி, தோசை, உப்புமா தருவது தவறு.

குழந்தையின் விருப்பத்திற்கு ஏற்ற உணவு தர வேண்டும். ஒரு நாளைக்கு 3 - 4 முறை, அவர்களின் எடைக்கு தகுந்த உணவு தருவது அவசியம்.

நொறுக்குத்தீனி, பழங்கள், பழச்சாறு, சுண்டல், கடலை மிட்டாய், எள் உருண்டை, கேரட், வெள்ளரிக்காய் துண்டுகள் தரலாம்.

வயதுக்கேற்ற உடல் எடை, உயரத்துடன் குழந்தை இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வது முக்கியம்.

எடை குறைவாக இருந்தால், குழந்தைக்கு தேவையான கலோரி, புரதம் தர வேண்டும். மூன்று வேளைக்கு பதிலாக நான்கு வேளை தரலாம்.

ரத்த சோகைக்கு பல காரணங்கள் இருந்தாலும், ஊட்டச்சத்து குறைவால், இரும்பு சத்து குறைவால் வரும் ரத்த சோகை தான் பொதுவானது.

போதிய ஊட்டச்சத்து தராதது, இரும்பு சத்து நிறைந்த உணவுகள் தராதது, 2 வயது வரை பால் மட்டுமே தருவது, குடல் புழுக்கள் இருப்பது, ரத்த சோகையை ஏற்படுத்துகிறது.

எனவே, இரும்பு சத்து நிறைந்த வெல்லம், கருப்பட்டி, பச்சை காய்கறிகள், பழங்கள், பேரீச்சம் பழம், முட்டை, இறைச்சி, ஈரல் ஆகியவற்றை தினசரி உணவில் தர வேண்டும்.

முன்பு இருந்த அளவுக்கு இல்லையென்றாலும், இன்றும் வைட்டமின், 'ஏ' குறைபாடு குழந்தைகளிடம் காணப்படுவதால், இச்சத்து குழந்தைகளுக்கு அவசியமானது.