அதே சுவை.. அதீத ஆரோக்கியம்.. அதாங்க.. நம்மவூரு சிறுதானிய நூடுல்ஸ்!
நூடுல்ஸை விரும்பாத குழந்தைகள் யாராவது இருப்பார்களா? குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் நூடுல்ஸ்ன்னாலே குஷிதான்.
ஆனால், கடைகளில் கிடைக்கும் மைதாவாலான நூடுல்ஸ்கள் ஆரோக்கியத்துக்கு கேடானவை எனத் தெரிந்தும், பலரும் ஆர்வமுடன் சாப்பிடுவர்.
எனவே, ஆரோக்கியத்தை மேம்படுத்த, சிறுதானிய வகை நூடுல்ஸ்க்கு முக்கியத்துவம் தரலாம். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் சாப்பிட ஏற்றது இது.
இரும்பு, கால்சியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் உட்பட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த, ராகி, கம்பு, சோளம், தினை போன்ற சிறுதானிய நூடுல்ஸ் செய்யும் ரெசிபி இதோ...
கொதிக்கும் தண்ணீரில் சிறிதளவு உப்பு, 1/2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து, நூடுல்ஸை சில நிமிடங்கள் வேக வைக்கவும். பின், தண்ணீரை வடித்துவிட்டு உதிர்த்து வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பொடிப்பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின், நீளவாக்கில் வெட்டிய பீன்ஸ், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும்.
சோயா, சில்லி சாஸ், கொரகொரப்பாக இடித்த சிவப்பு மிளகாய் தூள், நூடுல்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.
பின்னர், நறுக்கிய கொத்தமல்லி இலை அல்லது வெங்காயத்தாள் சிறிதளவு சேர்த்து கிளறி இறக்கினால், இப்போது சுவையான சிறுதானிய நூடுல்ஸ் ரெடி.
சாஸ் சுவையை விரும்பாதவர்கள் குருமிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். ஒருசில பிராண்ட் நூடுல்ஸ் பாக்கெட்களில் மசாலாவும் இருக்கக்கூடும்.