ரஷ்ய அதிபருக்கு இந்தியா அளித்த ராஜ விருந்தில் இடம்பெற்ற குச்சி காளான்... ஸ்பெஷல் அறிவோமா!
சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி, பரிசாக அளித்த கீதை, ஒரே காரில் பயணம் என்பதைத் தாண்டி, இன்னொரு விஷயம் உலகின் கவனத்தை ஈர்த்தது.
அது, உலகின் விலை உயர்ந்த, குச்சி காளான் உணவு. ரஷ்ய அதிபர் புடினுக்கு ஜனாதிபதி மாளிகையில் அளிக்கப்பட்ட அரசு விருந்தில், ஜம்மு - காஷ்மீரின் குச்சி காளான் ஸ்டப் இடம்பெற்றது.
இதில், குச்சி காளான் ஒரு கிலோ ரூ.35 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையாகிறது. உலகின் விலை உயர்ந்த காளான் ஆன, இதன் ஸ்பெஷல் குறித்து பார்க்கலாம்...
'குச்சி' என அழைக்கப்படும் காளானின் அறிவியல் பெயர் மார்ஷெல்லா எஸ்குலென்டா. ஆங்கிலத்தில் 'மோரல்'.
ஹிமாச்சல், ஜம்மு காஷ்மீர், உத்தகாண்ட் உள்ளிட்ட குளிரான, கடல் மட்டத்திலிருந்து மிக உயர்ந்த பகுதிகளில், வளம் மிக்க வனப்பகுதியில் இயற்கையாக காணப்படுகிறது.
இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். கிரீம் நிறம் முதல் அடர் பழுப்பு நிறம் வரை காணப்படும். பார்க்க தேன்கூடு வடிவில் இருக்கும்.
சாப்பிட மிக மிருதுவாக இருக்கும். அதிக சுவை கொண்டது. மிக நல்ல வாசனை கொண்டது. இறைச்சி போன்ற உணர்வை தரும். இது ராஜ உணவு என்றே அழைக்கப்படுகிறது.
பனி முடிந்த வசந்த காலங்களில், ஏப்., - ஜூன் வரையிலான காலகட்டங்களில் அதிகம் விளையும். வளர்வதற்கு 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரையிலான குளிர்நிலை தேவைப்படும்.
அடர்ந்த வனப்பகுதிக்குள் தரைப்பகுதியில் வளரும். அரிதாகவே கிடைக்கும். காட்டுத்தீயால், மண்ணில் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துகள் அதிகரிக்கும்போது அந்த நிலத்திலும் நன்றாக வளரும்.
குச்சி காளானில், பி1, பி2, பி3, பி5, பி6, சி, டி, டி2 போன்ற வைட்டமின்களும், இரும்பு, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற தாது சத்துக்களும் நிரம்ப உள்ளன.
செறிவான நார்ச்சத்து உள்ளது. பிளவனாய்டுகள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்தது. குறைந்த கலோரி, அதிக சுவை, நறுமணம் போன்றவற்றால் குச்சி சிறப்பிடம் பெறுகிறது.