அசத்தலான ராகி ஊத்தப்பம் செய்யலாம் வாங்க...!
1 கப் ராகி, 1/2 கப் உளுத்தம்பருப்பை தண்ணீரில் ஓரிரு முறை நன்றாகக் கழுவி, ஆறு முதல் எட்டு மணி நேரம் வரை ஊற வைக்கவும். 1/2 கப் ராகி பிளேக்ஸை 10 நிமிடங்கள் மட்டும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் ராகி, உளுத்தம்பருப்பு, ராகி பிளேக்ஸ் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். அரைத்த மாவை ஒரு இரவு அல்லது 8 முதல் 10 மணி நேரத்துக்கு புளிக்க விடவும்.
பெரிய நெல்லிக்காய் - 1, கறிவேப்பிலை சிறிதளவு, பொட்டுக்கடலை- 2 டே. ஸ்பூன், தேங்காய் துருவல் 1/2 கப், சிவப்பு மிளகாய் -2, தேவையான அளவு உப்பு சேர்த்து சட்னி அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து காய்ந்தவுடன் மாவை நன்றாகக் கலக்கி ஊத்தப்பமாக ஊற்றவும். அதன்மீது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி இலையை தூவவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வேக விட்டு எடுத்தால் சுவையான, ஆரோக்கியமான ராகி ஊத்தப்பம் ரெடி. தேங்காய் சட்டினியுடன் சேர்ந்து சாப்பிட சுவை அள்ளக்கூடும்.
நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலையுடன் சிறிது முளைக்கட்டிய பாசிப்பயறையும் சேர்த்து ஊத்தப்பம் சுடும்போது, ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.