நீரின்றி அமையா உலகு... ஆம், தண்ணீரின்றி மனிதன் உயிர் வாழ முடியாது.

மழைசீசன் துவங்கிவிட்டது. ஆனால், கொட்டும் மழைத் தண்ணீரோ சாலையில் தவழ்ந்து சென்று சாக்கடையில் சங்கமிக்கிறது.

மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து அரசு பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் ஏனோ பலருக்கும் அது பெரிதாக தோன்றுவதில்லை.

நல்ல படிப்பு, பொருளாதார வசதியை மட்டும் குழந்தைகளுக்கு அளித்தால் போதாது. எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான இயற்கை வளங்களையும் அளிக்க வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உள்ளது.

எனவே வீணாக வழிந்தோடும் மழை நீரை மீண்டும் பயன்படுத்தும் வகையில், எளிய முறைகளில் சேமிக்க சில டிப்ஸ்...

மழைக்காலங்களில் வீட்டுக் கூரைகளில் கொட்டக்கூடிய மழைநீரை ஆங்காங்கே பக்கெட்கள் அல்லது டிரம்கள் வைத்து சேமிக்கலாம்.

சீசன் துவங்கியவுடன் மேற்கூரையை நன்றாக சுத்தப்படுத்தி முதல் இருமுறை வரக்கூடிய மழைநீரை வெளியேற்றி விட வேண்டும். பின் வரக்கூடிய மழைநீரை குழாய் மூலமாக தண்ணீர் டேங்க், கிணற்றில் சேமிக்கலாம்.

கூரையில் வடியும் மழைநீரை குழாய் மூலமாக செடிகளுக்கு அல்லது தோட்டத்துக்குச் செல்லுமாறு அமைப்பை ஏற்படுத்தலாம்.

ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யவும் இந்த மழைநீரை பயன்படுத்தலாம். இதனால் வறண்டுள்ள ஆழ்துளைக் கிணறுகளில் நீர் ஆதாரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

வீட்டில் ஆங்காங்கே சிறிய டப்பாக்கள் அல்லது பாத்திரங்களில் சேமித்தால் உங்களின் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு தாகம் தீர்க்க உதவியாக இருக்கும்.