6 நாளில் கரைந்த அமர்நாத் பனி லிங்கம் வேகமாக உருகியதற்கு காரணம் என்ன?
ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ளது அமர்நாத் குகை.
கடல் மட்டத்தில் இருந்து, 12,756 அடி உயரம் கொண்ட இந்த குகையில், ஆண்டுதோறும் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க நாடு முழுதும் இருந்து பக்தர்கள் சென்று வருகின்றனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பின், பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அமர்நாத் பனிலிங்கம், 90 சதவீதம் அளவுக்கு அதி வேகமாக கரைந்துள்ளது.
ஆறு நாட்களில் பனிலிங்கம் வேகமாக கரைந்திருப்பது பக்தர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.
அதிகரிக்கும் பருவநிலை மாறுபாடு, புவி வெப்பமயமாதல், இமயமலையின் வெப்பநிலை உயர்வு முக்கிய காரணங்களாக உள்ளன.
மேலும் யாத்திரைக்காக மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு பணிகளே இதற்கு காரணம் என, தெரியவந்துள்ளது.
குறிப்பாக, குகைக்குள் ஒரே நேரத்தில் அதிகளவில் பக்தர்கள் செல்வதால் உடல் வெப்பம், ஈரப்பதம் மற்றும் காற்றின் வெப்பநிலை அதிகரித்து, பனி லிங்கம் வேகமாக கரைவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதிக வெப்பம் உமிழும் கட்டமைப்புகளை கட்டுப்படுத்துவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளை கடுமையாக அமல்படுத்துவது அவசியம் என, சுற்றுச்சூழல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
யாத்திரை தொடங்கிய நாளில் இருந்து இதுவரை, 2.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். ஆக., 28ல் யாத்திரை நிறைவு பெறுகிறது.