சளி தொல்லை போக்கும் மூலிகை ரசம்! ரெசிபி இதோ!

வீட்டிலே மருத்துவ குணமிக்க மூலிகை ரசம் வைத்து கொடுத்து சளி பிரச்னையை சரி செய்யலாம். இதை எப்படி செய்வது என்பதை பார்ப்போம்!

செய்முறை முதலில் அம்மியில் கற்பூரவள்ளி இலை, வெற்றிலை, துளசி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

துவையல் பதத்திற்கு வரும் வரை அரைக்க வேண்டும். பிறகு, அம்மியில் தனியா, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பூண்டு ஆகியவை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

இப்போது, அரைத்த எடுத்த இரண்டு கலவைகளையும் பெரிய அளவிலான பாத்திரத்தில் போட வேண்டும்.

இதில், இரண்டு தக்காளிகளை கையாலே பிசைய வேண்டும். பின், 3 டம்பளர் தண்ணீர் ஊற்றி, நன்கு கலந்து கொள்ளவும்.

இதையடுத்து, வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், மஞ்சள் துாள், பெருங்காய துாள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.

இதில், ஏற்கனவே தயார் செய்த மூலிகை சாறை ஊற்ற வேண்டும். ரசம் கொதிக்கும்போது ஒரு டீஸ்பூன் கல் உப்பு, எலுமிச்சை சாறு, இடித்த இஞ்சி ஆகியவை சேர்க்க வேண்டும்.

இதையடுத்து வாணலியில் மூடிபோட்டு மூட வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

அவ்வளவு தான் சுவையான, மருத்துவ குணமிக்க மூலிகை ரசம் தயார். இதை சுடு சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட்டால், சுவை அருமையாக இருக்கும்