குளிர்காலத்தில் மனச்சோர்வை விரட்ட அசத்தல் டிப்ஸ்

டிசம்பர், ஜனவரி உள்ளிட்ட குளிர்காலங்களில் வெயில் குறைவாக இருக்கும். பலரும் அதிக நேரம் போர்வைக்குள் சுருண்டு கிடப்பர்.

பலர் தங்களது தினசரி வேலைகளை ஒதுக்கி வைத்து வீட்டிற்குள்ளேயே திரைப்படம் பார்ப்பது, செல்போன் சாட் செய்வது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவர்.

இதனால் உடல் சுறுசுறுப்பு குறைவதோடு மனநலமும் பாதிக்கப்படலாம். இதை ஒருவித பருவகால பாதிப்பு என கூறலாம். இதிலிருந்து விடுபட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்த இதோ டிப்ஸ்...

குளிர்காலத்தில் வீட்டுக்குள்ளேயே இருக்காமல், குளிருக்கேற்ற ஆடைகளை அணிந்து வெளியே நடந்து சென்றால் சுத்தமான காற்று, உடலுக்குத் தேவையான வைட்டமின் டி-யைப் பெறலாம்.

மன அழுத்தத்தைக் குறைக்கவும், ஓய்வெடுக்கவும் உடற்பயிற்சி உதவும். தினமும் காலையில் கடற்கரை, பூங்கா போன்ற பொது இடங்களில் செய்வதால் மனம் சுறுசுறுப்பாகும்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுகள் மனச்சோர்வு உள்ளிட்ட மோசமான மனநிலை கோளாறுகளை உண்டாக்கலாம். எனவே, இவற்றை தவிர்ப்பது நல்லது.

பழங்கள், காய்கறிகள், உலர் பழங்கள், சத்தான இறைச்சி வகைகளை அடிக்கடி சேர்க்க வேண்டும். அதேபோல் ஆழ்ந்த உறக்கம் அவசியம்.

குளிர்கால விடுமுறை நாட்களில் பனி நிறைந்த பகுதிகளில் மலையேற்றம், சாகச விளையாட்டுகளில் ஈடுபடுவது மனச்சோர்வு, மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

அதிகாலையில் நடைப்பயிற்சி, யோகா உள்ளிட்ட சில பயிற்சிகளைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினால் மகிழ்ச்சியாக அமையும்.