அதிக புகை மற்றும் காற்று வீசும் இடங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுவதேன்?

ஒருசிலருக்கு புகை அதிகமுள்ள இடம் மற்றும் அதிகமாக காற்று வீசும் இடத்துக்கு செல்லும் போது சில வினாடிகள் மூச்சு திணறல் வரக்கூடும்.

பின்பு தானாகவே சரியாகும். இதற்கு காரணம் தெரிமாமல் பயம் உண்டாகும்; குழப்பமடைவர்.

புகை மற்றும் வேகமாக காற்று வீசும் போது, காற்றினில் புகை, துாசி, மாசு, வேதிப் பொருட்கள் போன்றவை கலந்து நுரையீரலுக்குள் செல்லும்.

நுரையீரலினுள் உள்ள காற்றுக்குழாய், காற்றுப்பைகளை பாதித்து அழற்சி ஏற்படுத்தி சுவாசக் குழாய்களை சுருக்கும்.

சில நேரங்களில் சளி உற்பத்தியை ஏற்படுத்தி சுவாச மண்டலத்தை பாதித்து மூச்சுத்திணறலை ஏற்படுத்துகிறது.

இப்பிரச்னை பெரிதாகும் போது சில நேரங்களில் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைத்து, கார்பன் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு அளவை அதிகரிக்கும்.

இதனால், சுவாச செயல்பாட்டு குறைவதால், மற்ற உறுப்புகளின் செயல்பாடுகளும் பாதிக்க வாய்ப்புகள் உள்ளன.

புகையினில் செல்லும் போது தற்காலிகமாக மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்றால் உங்களுக்கு ஆரம்ப கட்ட சுவாச நோய் இருப்பதற்கு வாய்ப்புண்டு.

மார்பக எக்ஸ்ரே மற்றும் நுரையீரல் செயல்பாட்டு திறன் (ஸ்பைரோமெட்ரி) மூலம் நுரையீரல் செயல்திறனை அறிந்து கொள்ளலாம்.

புகை உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். முகக்கவசம் அணியும் போது ஓரளவு பாதிப்பை குறைக்க இயலும்.