சாகச விரும்பிகளுக்கான அழகிய ஹரிஹார் கோட்டை
மகாராஷ்டிராவில் நாசிக் நகரத்திலிருந்து 40 கி.மீ., தூரத்தில் மேற்குத்தொடர்ச்சி மலையில் திரிம்பகேஷ்வர் மலைத்தொடரில் உள்ளது ஹரிஹார் கோட்டை.
கடல் மட்டத்தில் இருந்து 3,676 அடி உயரத்தில் உள்ள இக்கோட்டை, யாதவ (சேனா) வம்சத்தினரால் கட்டப்பட்டுள்ளது; 9 முதல் 14ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் எழுப்பப்பட்டுள்ளதாக சான்றுகள் கூறுகின்றன.
இயற்கை அழகை ரசிப்பதற்கு மட்டுமின்றி டிரெக்கிங் செல்வதும் இங்கு சிறப்பம்சமாகும். செங்குத்தான, வித்தியாசமான பாறை படிகள் சுற்றுலாப் பயணிகளை மயக்கி, அவர்களை மீண்டும் மீண்டும் இங்கு அழைக்கிறது.
உச்சியில் இருந்து பார்த்தால் பிரமிக்கும் வகையில் இயற்கை அழகு கொட்டிக் கிடக்கிறது. சுமார் 80 டிகிரி கோணத்தில் உள்ள செங்குத்தான படிகளில் ஏறுவது கடினமானதாகும்.
எனவேதான், இந்த மலையேற்றம் சாகசம் நிறைந்த அனுபவத்தை அளிக்கிறது. பாறைகளின் இடையே இந்த குறுகிய படிகள் செதுக்கப்பட்டுள்ளன.
மேலே ஏறும்போது பிடிமானம் கிடைக்கும் வகையில், விரல்களை வைக்க கீற்றுகள் செதுக்கப்பட்டுள்ளன. மனம் மற்றும் உடல் உறுதி இருந்தால் மட்டுமே இங்கு, கோட்டைக்கு ஏறிச்செல்ல முடியும்.
மழைக்காலத்தில் மலையேறினால் சுற்றியுள்ள பச்சைப்பசேல் அழகில் ஒருகணம் மூச்சடைத்து நிற்பீர்கள். இங்கு ஹனுமான், திரிம்பகேஷ்வர் சிவ ஜோதிர்லிங்க கோவில், நந்தி சிலைகளை கண்டு தரிசிக்கலாம்.
கோட்டையின் உச்சியில் இருந்து அஞ்சநேரி, பிரம்மகிரி மற்றும் உத்வாட் போன்ற பல கோட்டைகளையும், சிகரங்களையும் பார்க்கலாம்.
அருகிலுள்ள நிர்குட்பாடா கிராமம் அல்லது படிகள் வழியாக என ஹரிஹார் கோட்டை மலையேற்றத்தை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். முதல் வழியில் துவங்கும் மலையேற்றப் பாதையானது மிகவும் எளிமையானது.
வழியெங்கும் வயல்கள், நீரோடைகளை ரசித்துக் கொண்டே கடந்தவுடன், சவாலான
படிகளில் ஏறினால் கோட்டை உச்சியை அடையலாம். மழைக்காலத்தில் ஆங்காங்கே சிறு
நீரோடைகள் ரம்மியமாக காட்சி தரும்.
மற்றொரு பாதையான படி வழியில் கோவில்கள், பசுமையான பள்ளத்தாக்குகள் என செல்வது அதிக சிரமம் தான். ஆனால், இளசுகள் சவாலான இப்பாதைக்கே டிரெக்கிங் செல்ல முக்கியத்துவம் தருகின்றனர்.