வைரஸுக்கு எமன் ஏலக்காய்! ஆய்வில் தகவல்!

வைரஸ்களுக்கு எதிராக நம்முடைய உடலைத் தயார் செய்யும் சக்தி ஏலக்காய்க்கு உண்டு என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஜப்பான் நாட்டில் உள்ள ஷின்ஷு பல்கலை ஆய்வாளர்கள் வைரஸ் நோய்களுக்கு தாவரங்களில் உள்ள சேர்மங்கள் எப்படி தீர்வாக அமையும் என்பது குறித்து ஆராய்ந்து வந்தனர்.

அப்போது ஏலக்காயில் உள்ள 1, 8 - சினியால் எனும் சேர்மம் வைரஸ்களுக்கு எதிராக உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு செல்கள் போராடுவதற்கு உதவும் என்று கண்டறிந்தனர்.

இதை நேரடியாக சோதிக்க வேண்டும் என்பதற்காக மனித நுரையீரலில் இருக்கும் A549 எனும் செல்களை தனியே பிரித்தனர்.

அதன் மீது 1, 8 - சினியாலைச் செலுத்தினர். பிறகு அதே செல்களுக்குள் வைரஸையும் செலுத்தினர்.

இந்த சினியால் செல்களில் இருக்கிற நியூக்ளியர் அமிலங்களை துாண்டிவிட்டது. இந்த அமிலங்கள் வைரஸின் டிஎன்ஏ, ஆர்ஏ மூலக்கூறுகளை புரிந்துகொண்டன.

வெகு குறைந்த நேரத்தில் இந்த அமிலங்கள் சைட்டோகைன்ஸ் எனும் நோய் எதிர்ப்பு செல்களுக்கு சமிக்ஞை கொடுத்தன.

இதனால் நம்முடைய உடலில் இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் துாண்டப்பட்டு வைரஸை சுலபமாக அழித்தன.

வெளி மருந்து கொடுக்காமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்தை துாண்டி வைரஸுக்கு எதிராக போராட வைக்கும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது என்பது இந்த ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.