விலங்குகள் கடித்தால் அஜாக்கிரதையாக இருக்காதீர்கள்

சமீபமாக தெருநாய்கள் மற்றும் வளர்ப்புப் பிராணிகள் கடித்து மனிதர்கள் காயமடையும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, 'ரேபிஸ்' தொற்றிலிருந்து, செல்லப்பிராணிகள், மனிதர்களை பாதுகாக்க ஒரே வழி, கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதுதான்.

ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் என எந்தவொரு விலங்கினம் கடித்தாலும் பாதிப்பு ஏற்படும்.

எனவே, எவ்வகை விலங்கு கடித்தாலும், சிகிச்சை அவசியம். அப்போது தான், உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கான சிகிச்சை, மருந்து, தடுப்பூசி ஆகியவை அரசு மருத்துவமனைகளில் கிடைக்கிறது.

விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் நோய்கள், பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் மட்டுமில்லாது கொசுக்களின் மூலமாகவும் பரவுகிறது.

வெறிநாய் வைரஸ், பிளேக், இபோலா வைரஸ், இன்புளூயன்சா, லெப்டோ பைரோசிஸ், பறவைக் காய்ச்சல், மாடுகள் மூலம் பரவும் காசநோய் போன்ற பல நோய்கள் விலங்குகள் மூலம் பரவுகின்றன.

இவை மனிதர்களுக்கு நேரடியாக அல்லது மறைமுகமாக உணவு, நீர் மற்றும் சுற்றுப்புறங்களின் வாயிலாக பரவுகிறது. அதே போன்று, சொறி, சிரங்கு உள்ளிட்ட தோல் வியாதிகளும் பரவுகின்றன.

எனவே, செல்லப்பிராணிகள் மட்டுமின்றி, எந்தவொரு பறவை, விலங்கினம் கடித்தாலும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதும், சிகிச்சை பெறுவதும் அவசியம்.