கற்றாழையை சாப்பிடும் முன் ஏழு முறை கழுவணுமா?

கற்றாழை, ஆலோவேரா (Aloe vera) என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படுகிறது. இது அழகு சாதனமாகவும், ஆரோக்கியத்தை அள்ளிதரும் மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு அற்புத மூலிகையாகும்.

கற்றாழையில் சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, செங்கற்றாழை, பேய்க்கற்றாழை, கருங்கற்றாழை, வரிக்கற்றாழை , சோற்றுக்கற்றாழை எனப் பல வகை உண்டு.

அவற்றில் சோற்றுக் கற்றாழைதான் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. உடலுக்குத் தேவையான நீர்சத்தைக் கொடுத்து தேவையற்ற நச்சுத்தன்மையை அகற்றும்.

மேலும் உடல் சூட்டைத் தணிக்கும். பெண்களின் கருப்பை, கூபக உறுப்புகளில் வரும் நோய்களுக்கும், ஆண்களின் விந்தணு உற்பத்திக்கும் நல்ல மருந்து இது.

ஆனால், கற்றாழை ஜெல்லை கழுவாமல் சாப்பிடக்கூடாது. அதை வெட்டிய உடன் வரும் மஞ்சள் நிறப் பாலை முழுமையாக நீக்க வேண்டும்.

பிறகு அதன் தோலை அகற்றிவிட்டு, உள்ளே இருக்கும் வழவழப்பான ஜெல்லை எடுத்து, ஏழு முறை நீரில் கழுவ வேண்டும். அப்போதுதான் அதிலுள்ள அலோனின் என்ற வேதிப்பொருள் நீங்கும்.

இல்லாவிட்டால் உபாதை அளிக்கும் விதமாக வயிற்றுப்போக்கு அல்லது வயிற்று எரிச்சலை உண்டாக்கும்.

மேலும் ஏழுமுறை என்பது ஒரு கணக்கு தான். நன்கு கழுவினால் மட்டுமே, அவற்றில் காணப்படும் கசப்புச் சுவை மற்றும் நாற்றமும் விலகும். விருப்பம் போல் மோரில் கலந்தோ, ஜூஸ் செய்தோ குடிக்கலாம்.