வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா? புட்டு புட்டு வைக்கிறது 'சிபில் ஸ்கோர்'

கடந்த சில ஆண்டுகளாக யார் கடன் கேட்டு வங்கிகளை அணுகினாலும், அவர்களின் பான் எண்ணை பயன்படுத்தி, வங்கிகள் கடன் தகுதி புள்ளிகள் நிலை குறித்து ஆராயப்படுகிறது.

ஒருவரின் சொத்து நிலை, கடனை திருப்பி செலுத்தும் அளவுக்கு அவரிடம் உள்ள வருவாய் குறித்த விபரங்களை, வங்கிகள் ஆராயும். இதைத்தான் 'சிபில் ஸ்கோர்' என்றழைக்கின்றனர்.

இதில், ஒருவரின் செல்வ நிலை மட்டுமல்லாது, அவரது திருப்பி செலுத்தும் பழக்கம் எப்படிப்பட்டது என்ற அடிப்படையில் தான், சிபில் ஸ்கோர் வரையறுக்கப்படுகின்றன.

இதனால் சிக்கல் இன்றி கடன்களை முறையாக செலுத்தி வரும் நபர்களுக்கு, வருவாய் குறைவாக இருந்தாலும் வீட்டுக்கடன் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதே சமயம், புள்ளிகள் குறைந்தவர்களுக்கு வீட்டுக்கடன் மறுக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக, கிரெடிட் கார்டு, தொலைபேசி கட்டணம் ஆகியவற்றை முறையாக செலுத்தாவிட்டாலும் கடன் தகுதி புள்ளிகள் (சிபில் ஸ்கோர்) குறைகின்றன.

கிரெடிட் கார்டு, தொலைபேசி கட்டணம் கட்டுவதில் வாடிக்கையாளரால் மட்டுமே பிரச்னை ஏற்படும் என்று மதிப்பிடுவது தவறு.

சம்பந்தப்பட்ட சேவை வழங்கும் நிறுவனத்தின் குளறுபடியால் கூட, கட்டணம் வசூலாவதில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம்.

இது போன்ற சிறிய காரணங்களால், ஏற்படும் கடன் தகுதி புள்ளிகள் சரிவு, வீட்டுக்கடன் போன்ற விஷயங்களில் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட வாய்ப்பாக அமைகிறது.

எனவே, வீட்டுக்கடனுக்கு செல்வோர், தங்கள் கடன் தகுதி உள்ளிட்டவைகளை சீராக பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர், வங்கி அதிகாரிகள்.