ரத்த அழுத்தத்தை சீராக்கும் நார்ச்சத்து

நாம் உண்ணும் உணவு எல்லா விதமான சத்துக்களும் நிறைந்ததாக இருக்க வேண்டும், அதையே சரிவிகித உணவு என்கிறோம்.

இந்தச் சத்துக்களில் முக்கியமான ஒன்று நார்ச்சத்து. சரியான அளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்வது ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால், மாறி வரும் உணவு முறையில் போதிய அளவில் நார்ச்சத்து இருப்பதில்லை.

ரத்த அழுத்தத்தைச் சரியாக வைத்துக் கொள்ள தினமும் எவ்வளவு நார்ச்சத்து எடுத்துக் கொள்ள வேண்டும் என ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மொனாஷ் பல்கலை ஆய்வுப் பூர்வமாகக் கண்டறிந்துள்ளது.

எந்தவிதமான மருந்தும் எடுத்துக் கொள்ளாமல் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டும் என்றால் பெண்கள் தினமும் உணவில், 28 கிராமும், ஆண்கள் 38 கிராமும் நார்ச்சத்தைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கூடுதலாக 5 கிராம் எடுத்துக்கொண்டால் மிக அதிகமான உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வரும் என்கிறது ஆய்வு.

குடலில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் நார்ச்சத்துக்களை உட்கொண்டு, சிலவித நன்மை செய்யும் கொழுப்பு அமிலங்களை உருவாக்குகின்றன. இவை ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

நார்ச்சத்து கிடைப்பதற்கு முழு தானியங்கள், பீன்ஸ், நிறைய காய்கறிகளை உட்கொள்ளப் பரிந்துரைத்துள்ளது அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலை.

முழு கோதுமையில் செய்த ரொட்டி, பழுப்பு அரிசி, அசைவ உணவுகளுக்குப் பதில் கடலை, பட்டாணி, கொண்டைக் கடலை, பழச்சாறுகளுக்குப் பதில் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளது.