எண்ணிலடங்கா மருத்துவ குணம் நிறைந்த கிராம்பு!
பிரியாணியை மணக்கச் செய்யும் கிராம்புக்கு, லவங்கம் என்னும் பெயரும் உண்டு. கசப்பும், காரச்சுவையும் உடையது கிராம்பு.
சைவ உணவு வகைகளான, கேசரி, ரவா கிச்சடி, பாயசம் ஆகியவையாக இருந்தாலும் சரி, அசைவ உணவான பிரியாணி, சிக்கன், மட்டன், புலாவ் வகையானாலும் சரி கிராம்புக்கு தனி இடம் உண்டு.
கிராம்பு மொட்டுக்களை ஆவியில் வைத்து, கிராம்பு தைலம் தயாரிக்கப்படுகிறது. மரத்துப் போக செய்யும் மயக்க மருந்தாகவும் கிராம்பு தைலம் பயன்படுகிறது.
இத்தைலம் ரத்த ஒட்டத்தை சீராக்கச் செய்ய வல்லது. உடல் உஷ்ணத்தை சரியாக வைக்கவும் உதவுகிறது.
கபத்தையும், பித்தத்தையும், கிராம்பு குறைப்பதோடு, ஜீரண சக்தியையும் அதிகரிக்கிறது.
சோர்வை போக்கி, வயிற்று பொருமலை நீக்குகிறது. பசியின்மை, அதிக தாகம், வாந்தி இவற்றை கட்டுப்படுத்துகிறது.
பல் வலியைப் போக்குவதில் கிராம்பு தைலம் பெரிதும் பலன் தரும். பல் சொத்தையை தடுத்து, வாய் நாற்றத்தை நீக்குகிறது.