கூர்ந்து கவனித்தால் கண் சிமிட்டல் குறையும்!
ஒருவரின் கண் சிமிட்டும் விகிதத்துக்கும், அவர் ஒரு செய்தியைக் கவனிக்க எடுக்கும் முயற்சிக்கும் இடையே மிக நெருங்கியத் தொடர்பு உள்ளதை, மாண்ட்ரியல் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறிப்பாக, பின்னணி இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் பேச்சைக் கூர்ந்து கவனிக்கும்போது, மனிதர்கள் வழக்கத்தை விட மிகக் குறைவாகவே கண் சிமிட்டுகின்றனர்.
மூளையானது தனது கவனத்தையும் அறிவுசார் ஆற்றலையும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் ஒருமுகப்படுத்த முயலும்போது இத்தகைய மாற்றம் நிகழ்கிறது.
'ட்ரெண்ட்ஸ் இன் ஹியரிங்' என்ற இதழில் வெளியான இந்த ஆய்வில், அதிநவீன 'ஐ-டிராக் கிங்' கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு தன்னார்வலர்களின் கண் அசைவுகள் துல்லியமாகக் கண்காணிக்கப்பட்டன.
கண் சிமிட்டுதல் என்பது கண்களை ஈரப்பதமாக வைப்பதற்கான வெறும் அனிச்சைச் செயல் மட்டுமல்ல; அது மூளையின் கடின உழைப்பைக் காட்டும் ஒரு முக்கியக் குறியீடு என்பதை இந்த முடிவுகள் நிரூபிக்கின்றன.
உணர்வுசார் செயலாக்கம் குறித்த நமது புரிதலை இது மேம்படுத்துகிறது.
மருத்துவப் பரிசோதனைகளிலும், தினசரி தகவல் பரிமாற்றத்திலும் ஒருவரின் மூளைச் செயல்பாட்டுச் சுமையை எந்தவிதச் சிரமமுமின்றி துல்லியமாகக் கண்டறிய இந்த ஆய்வு புதிய வழிகளைத் திறந்துவிட்டுள்ளது.