குழந்தையின் முக வளர்ச்சியை பாதிக்கும் மறைமுக அபாயம்
இயல்பாக குழந்தைகள் மூக்கின் மூலம் சுவாசிக்க வேண்டும். ஆனால் பலரும் வாயைத் திறந்து வைத்து வாய் மூலம் சுவாசித்து, துாங்கும் பழக்கத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இது சாதாரண பழக்கமாக தோன்றினாலும், நீண்ட காலம் தொடர்ந்தால் குழந்தையின் முகம், தாடை மற்றும் உடல் வளர்ச்சியில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த பழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் அடிக்கடி மூக்கடைப்பு, அலர்ஜி, அடினாய்டு அல்லது டான்சில் போன்றவையாகும்.
மூக்கால் சுவாசிக்கும் போது காற்று வடிகட்டப்பட்டு ஈரப்பதம் சேர்த்து உடலுக்கு செல்லும். ஆனால் வாயால் சுவாசிக்கும் போது இந்த பாதுகாப்பு குறையக்கூடும்.
இந்த பழக்கம் நீண்ட காலம் தொடர்ந்தால், பற்களில் பல எதிர்வினை மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, மேல் பற்கள் முன்பக்கமாக தள்ளியும், ஒழுங்கின்றியும் வளரும்.
பற்களால் கடிக்கும் போது மேல்தாடையும் கீழ்தாடையும் சேராதிருத்தல், ஈறுகள் உலர்வது, பல் சொத்தை அதிகரிப்பு போன்ற பிரச்னைகளால் வாய்ப்பகுதி ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.
முக அமைப்பில் நீளமான முகத்தோற்றம், உதடு எப்போதும் திறந்த நிலை, கீழ்தாடை பின்தங்கிய தோற்றம் மற்றும் முக தசைகள் பலவீனமாகுதல் ஆகியவை இதன் பாதிப்பாகும்.
இதனுடன் இரவில் சத்தமாக துாங்குதல், துாக்கக் குறைவு, கவனம் சிதறுதல் போன்ற தினசரி பிரச்னைகளும் குழந்தைகளிடையே காணப்படுகின்றன.
இந்த அறிகுறிகள் இருந்தால் காது, மூக்கு, தொண்டை நிபுணரின் பரிசோதனை மூலம் அடினாய்டு, டான்சில் அல்லது மூக்கடைப்பு போன்ற பிரச்னைகளை சரி செய்ய வேண்டும்.
பின்னர் குழந்தைகள் நல பல் மருத்துவரிடமும் கலந்தாலோசிக்கும் போது குழந்தையின் வயதுக்கேற்ப சிகிச்சையளித்து மெதுவாக மூக்கின் மூலம் சுவாசிக்க பழக்கப்படுத்தலாம்.
எனவே, துவக்கத்திலேயே இந்த பழக்கத்தை கண்டறிந்து சரியான சிகிச்சை எடுத்தால், எதிர்காலத்தில் பெரிய சிகிச்சைகளைத் தவிர்க்க முடியும்.