இன்ஸ்டன்ட் லோன் மோசடிகள்... சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை!
சமூக வலைதள விளம்பரங்கள், குறுந்தகவல்கள் மூலம் '5 நிமிடங்களில் இன்ஸ்டன்ட் லோன், 'ஆவணங்கள் தேவையில்லை' என கூறி சில செயலிகள் பொதுமக்களை கவர்கின்றன.
செயலியை பதிவிறக்கம் செய்தவுடன், மொபைலில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட தகவல்களுக்கு அனுமதி பெறப்படுகிறது.
பின், அதிக வட்டி வசூல், மிரட்டல் அழைப்புகள், புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி அவதுாறு பரப்புதல் போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக, அவசர தேவைக்காக கடன் பெற முயலும் இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.
சிலர் கடன் தொகையை திருப்பி செலுத்திய பின்னரும் தொடர்ந்து பணம் கேட்டு தொந்தரவு செய்யப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.
எனவே, இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற வங்கிகள் மற்றும் நம்பகமான நிதி நிறுவனங்களின் செயலிகள் மூலம் மட்டுமே கடன் பெற வேண்டும்.
அறியாத 'லிங்க்'கள் மற்றும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுபோன்ற செயலிகள் வாயிலாக எந்த சூழலிலும் கடன் பெறாமல் இருப்பதே இதற்கு தீர்வு.
'மார்பிங்' புகைப்படங்கள் அனுப்பி மிரட்டினால் பயப்படாமல் புகாரளிக்க முன்வர வேண்டும். தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் என்பது போலீசாரின் அட்வைஸாகும்.