ஜெய்ப்பூரின் ஹாதி கான்: இந்தியாவின் முதல் யானைகள் கிராமம்!
ராஜஸ்தான் ஜெய்ப்பூரின் ஆம்பர் கோட்டையைச் சுற்றி வாழ்ந்து வந்த யானைகளையும், அவற்றின் பாகன்களையும் ஒருங்கிணைத்து, அம்மாநில அரசு ஒரு முறையான வாழ்விடத்தை உருவாக்கியுள்ளது.
அதுவே ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற 'ஹாதி கான்' (யானைகள் கிராமம்) ஆகும்.
தற்போதைய நிலவரப்படி, இங்கு சுமார் 80 யானைகள் மிகச்சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இது ஒரு உயிரியல் பூங்கா அல்ல; மாறாக, யானைகள் தங்கள் பாகன் குடும்பங்களுடன் இயல்பாக வாழும் ஒரு கிராமம்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் யானைகளுடன் நெருக்கமாகப் பழகவும், அவற்றின் அன்றாட வாழ்க்கை முறையை நேரில் காணவும் முடியும்.
யானைகளுக்கு உணவளித்தல், அவற்றைக் குளிப்பாட்டுதல் மற்றும் யானைச் சவாரி செய்தல் போன்றவற்றுக்குத் தனித்தனிக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
இந்த கிராமத்தில், யானைகளின் உடல் மீது குழந்தைகள் வண்ணங்களால் ஓவியம் வரையும் காட்சி காண்போரைக் கொள்ளை கொள்ளும்.
நவீன உலகில் செல்போன் திரைகளிலேயே மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு, இத்தகைய பேருயிருடன் தொட்டுப் பழகி வண்ணம் தீட்டும் அனுபவம் ஒரு வரப்பிரசாதமாகும்.
இப்பகுதி காலை 9:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை திறந்திருக்கும்.