சிங்கப்பெண் படையில் புகாரளிக்க உதவி எண் அறிவிப்பு

தமிழக காவல் துறையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது.

இப்படை போலீசாரை தொடர்புகொள்ள, '1091' என்ற பிரத்யேக உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.கட்டணமின்றி இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

சென்னை எழும்பூரில் உள்ள, மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு அறை காவலர்கள் அழைப்புகளை ஏற்பர். இதற்காக, அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பின் அவை சிங்கப்பெண் அதிரடிப்படை அல்லது ரோந்து குழுவினருக்கும் தகவல் அனுப்பப்பட்டு, சம்பவ இடத்துக்கு காவலா்கள் விரைந்து செல்வதற்கான நடவடிக்கை எடுக்கும்.

இதன் மூலம் பெண்கள், குழந்தைகள் எதிா்கொள்ளும் தொந்தரவு, குடும்ப வன்முறை, பாலியல் தொந்தரவு, மிரட்டல், பின்தொடா்தல் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

ஏற்கனவே உள்ள, '112' என்ற அவசர கால உதவி சேவையுடன், '1091' என்ற எண்ணும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

ஆனால், 1091 என்ற எண்ணை தொடர்பு கொள்ளும்போது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீசாரே அழைப்பை ஏற்பர்.

இம்மையம் 24 மணி நேரமும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் செயல்படும்.