காரசார உணவுகள் தொண்டைக்கு எதிரி

சாதாரணமாக பருவநிலை மாறும் போது உடலில் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும். குளிர்காலங்களில் இருமல், ஜலதோஷம் என பலரும் அவதிப்படுவர்.

குறிப்பாக தொண்டையில் புண் வந்தால், அரிப்பு, எரிச்சல் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால், தொண்டை புண்ணை விரைவில் சரிசெய்யலாம்.

நா ஊற வைக்கும் உணவுகள்... புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலி ஏற்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிடுவதை தவிர்க்கவும்.

ஜலதோஷத்தின் போது மிளகாய், கிராம்பு, மிளகு போன்ற காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் தொண்டை புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும்.

அதேபோல், தொண்டையில் புண் உள்ளபோது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என பலர் நினைக்கின்றனர். ஆனால் இது ஆபத்தானது என்பதால், பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகளையும் தவிர்க்க வேண்டும். இவை விழுங்க கடினமாக இருப்பதுடன், அதிகமான வலியையும் ஏற்படுத்தும். எனவே, நட்ஸ், பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம்.

சூடான காப்பி குடித்தால் தொண்டைக்கு இதமாக இருப்பினும், சிறிது நேரம் கழித்து கஃபைனிலுள்ள பொருள், தொண்டையில் அரிப்பு, வலியை தரும். சூடாக இஞ்சி டீ குடித்தால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.

சிலர் தொண்டை புண்ணின் போது, ஆல்கஹாலை எடுத்து கொள்வர். ஏனெனில் அவை தொண்டைக்கு சற்று இதத்தை தரும். ஆனால் அவை அந்த இடத்தில் மேலும் புண்ணை பெரிதாக்கக்கூடும்.