புகையிலையை கைவிட்டால் பொருளாதாரம் உயரும் ஆய்வில் தகவல் ....
'நாட்டில், புகையிலை பழக்கம் அடியோடு ஒழிந்தால், 2 கோடி குடும்பங்களின் பொருளாதார நிலை உயரும்' என, பி.எம்.ஜெ., எனப்படும், பிரிட்டிஷ் மருத்துவ இதழின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை, மும்பை டாடா சமூக அறிவியல் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நொய்டா புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில், 2022 - 23ல் தேசிய மாதிரி கணக்கெடுப்பில் நாடு முழுதும் உள்ள குடும்பங்களின் வருமானம், செலவு, வாழ்க்கை முறைகள் போன்றவை பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், 2.61 லட்சம் குடும்பங்களின் தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பீடி, சிகரெட், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு குடும்பங்கள் செலவிடும் தொகை, மற்ற மாதாந்திர செலவுகள் கணக்கிடப்பட்டன.
அதன்படி புகையிலை பழக்கத்தை கைவிட்டால், கிராமப்புறங்களில், 11.64 சதவீத குடும்பங்களும், நகர்ப்புறங்களில், 7.26 சதவீத குடும்பங்களும் பொருளாதார நிலையில் மேம்படும் வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக, ஏழை குடும்பங்களில், 12.4 சதவீதமும், நடுத்தர வருமானக் குடும்பங்களில் 16.8 சதவீதமும் முன்னேற்றம் காணலாம்.
இதனால் பலனடையும் குடும்பங்களின் எண்ணிக்கை 2 கோடிக்கும் அதிகம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.