அயோத்தி வந்தது உலகின் மிகப்பெரிய பூட்டு.. 1265 கிலோவில் ஒரே லட்டு!

உ.பி., மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்ட ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை (ஜன.,22) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, உலகம் முழுவதும் மற்றும் உள்நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து கடவுள் ராமர் மீது பக்தி கொண்டவர்கள் பல்வேறு வகையான பொருட்களை அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர்.

அந்த வகையில், ராம பக்தர்களால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய பூட்டு (400 கிலோ எடை கொண்டது) மற்றும் 1,265 கிலோ லட்டு பிரசாதம் ஆகியவை அயோத்தி வந்தடைந்தது.

இவை கோயில் நிர்வாகத்திடம் விரைவில் ஒப்படைக்கப்பட உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ஸ்ரீராம் கேட்டரிங் சர்வீசஸ் என்ற நிறுவனம் 1,265 கிலோ எடையில் லட்டுவை தயாரித்துள்ளது. 3 நாட்களில் 25 பேர் 1,265 கிலோ லட்டுவை தயாரித்தனர்.

உலகின் மிகப்பெரிய பூட்டை, உ.பி., மாநிலம் அலிகார்க்கை சேர்ந்த முதிய தம்பதி சத்ய பிரகாஷ் சர்மா மற்றும் ருக்மினி சர்மா ஆகியோர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாரித்தனர்.

சத்ய பிரகாஷ் சர்மா சமீபத்தில் காலமானார். இந்த பூட்டை அயோத்தி கோயிலுக்கு வழங்க வேண்டும் என்பது அவரது ஆசை.