மரபணு ரீதியாக பரவும் இதய நோய் பாதிப்பு! ஆய்வில் தகவல்!
தினமும் உடற்பயிற்சி, கட்டுப்பாடான உணவு பழக்கம், புகை, மது என எந்த கெட்ட பழக்கமும் இல்லாத இளம் வயதினர் திடீர் மாரடைப்பில் உயிரிழப்பது தற்போது அதிகரித்து வருகிறது.
இதற்கெல்லாம் காரணம், 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' என்கின்றனர் டாக்டர்கள்.
ஐ.சி.எம்.ஆர்., எனப்படும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதி உதவியுடன் திடீர் மரணம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு உள்ளவர்களுக்கு இதயத்தின் தசைகள் அசாதாரணமாக தடிமனாகிறது.
இதனால் ரத்தத்தை, 'பம்ப்' செய்ய இதயம் திணறுகிறது. இதனால் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி, சீரற்ற இதயத்துடிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.
இந்த, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு, 500 பேரில் ஒருவருக்கு மரபணு ரீதியில் ஏற்படுவதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
குடும்பத்தில் உள்ள யாருக்காவது ஏற்கனவே, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு இருந்தால், அடுத்த தலைமுறையினருக்கு இந்த மரபணு மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.
மரபணு மாற்றம் ஏற்படுபவர்களுக்கு மிக இளம் வயதிலேயே, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, குடும்பத்தில் யாருக்காவது, 'ஹைபர்டிராபிக் கார்டியோமயோபதி' பாதிப்பு இருந்தால், முன்கூட்டியே பரிசோதனை மேற்கொள்வது வருமுன் காக்க உதவும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.